×

நிலச்சரிவு பகுதியில் சீரமைப்பு: களம் இறங்கிய பொதுமக்கள்

மஞ்சூர்:மஞ்சூர் அருகே உள்ளது குந்தா பாலம். 800கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் இப்பகுதியில் வரலாறு காணாதவகையில் கனமழை பெய்தது. இந்த மழையில் குந்தாபாலத்தில் உள்ள பன்னிமேடு, மேட்டுச்சேரி பகுதிகளில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தது. குடியிருப்புகளுக்கு முன் மற்றும் பின்புறங்களில் பெரிய அளவில் மண்சரிவுகளும் ஏற்பட்டது. தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள மனமகிழ் மன்ற கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டனர். மேலும் விடிய, விடிய பெய்த அடைமழையில் குந்தாபாலம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. புல்மைதானத்தின் ஒரு பகுதி அடியோடு பெயர்ந்தது. மழை நின்ற பிறகும் அப்பகுதியில் தொடர்ந்து ஊற்றுநீர் வெளியேறி மண் அரிப்பு ஏற்பட்டு வந்தது.

இதனால் கோயில் வளாகமே முற்றிலுமாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டதுடன், மீண்டும் பலத்த மழை பெய்யும் பட்சத்தில் மேலும் மண் அரிப்பு ஏற்பட்டு கீழ்புறம் உள்ள வீடுகளும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தடுப்புசுவர் அமைத்து சீரமைக்க வேண்டும் என குந்தாபாலம் பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், கோயில் வளாகம் என்பதால் பொதுமக்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து ஊர் கூடி தேர் இழுப்பது என முடிவு செய்த பொதுமக்கள் அப்பகுதியை சேர்ந்த கெம்பாகவுடர் என்பவரின் மேற்பார்வையில் ஆலோசனை நடத்தி நிலச்சரி ஏற்பட்ட பகுதியில் தாங்களே சீரமைப்புபணிகளை மேற்கொள்வதென தீர்மானித்து அதிரடியாக களமிறங்கினார்கள்.

தடுப்பு சுவர் அமைக்க சுமார் ரூ.40 லட்சத்திற்கும் மேலாகும் என்பதால் வீட்டுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கினார்கள். இதேபோல் முக்கிய பிரமுகர்கள் பலரின் உதவியோடு தடுப்புசுவர் அமைக்கும் பணியை துவக்கி கடந்தசில தினங்களாக மேற்கொண்டு வருகிறார்கள்.


Tags : civilians ,landslide area , Landslide area, renovation, public
× RELATED மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று...