×

சித்தூரில் முதல்வர் ஜெகன்மோகன் வருகையையொட்டி பேனர், கட்அவுட் அமைக்கும் பணி தீவிரம்: இடம்பிடிக்க கட்சியினர் ஆர்வம்

சித்தூர்: சித்தூரில் முதல்வர் ஜெகன்மோகன் வருகையையொட்டி பேனர், கட்அவுட் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் தங்களுக்கான இடத்தை பிடிக்க கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். சித்தூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஜெகன்மோகன் நாளைமறுதினம் வருகை தருகிறார். தொடர்ந்து அம்மா மடி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி மொசானிக் விளையாட்டு மைதானத்தில் ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. முன்னதாக ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி அங்கிருந்து கலெக்டர் பங்களா வழியாக  திருத்தணி  சித்தூர் தேசிய நெடுஞ்சாலை, காந்திசிலை, எம்எஸ்ஆர் சர்க்கிள், வேலூர்-சித்தூர் சாலை, துர்கா நகர் காலனி வழியாக பி.வி.கே.என் அரசு கல்லூரி மைதானத்தில்  நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து  கொண்டு அம்மா மடி திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.

இதற்காக  சித்தூர் மாநகரத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்களும், வார்டு பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் மாநகரம் முழுவதும் முதல்வரை வரவேற்று பேனர் அமைக்க இடம் பிடித்து வருகின்றனர்.அதன்படி, சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சாலையின் இருபுறமும் பேனர், கட்அவுட் அமைக்க இடம் பிடித்து தங்களது பெயருடன் கூடிய நோட்டீசை வைத்துவிட்டனர். அதுமட்டுமில்லாமல் பி.வி.கே.என் அரசு கல்லூரி  மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு எதிரே 120 அடி உயரத்தில் கட்அவுட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் என்டிஆர் சர்க்கிள் அருகே  60 அடி உயரத்தில் கட்அவுட் அமைக்க  கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன.

Tags : Jaganmohan ,Chittoor , intensity , banner, arrival, Chief Minister Jaganmohan,Chittoor
× RELATED தனது தந்தையின் நினைவிடத்தில் இருந்து...