×

ஜேஎன்யு மாணவர்கள் மீதான கடுமையான தாக்குதல்: விசாரணையை தொடங்கியது டெல்லி காவல்துறை

டெல்லி: ஜேஎன்யு-வில் நடந்த மோதல்கள், வன்முறை தொடர்பாக டெல்லி போலீஸ் குழுவினர் இன்று விசாரணையை தொடங்கினர். டெல்லியில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று முன்தினம் மாலை அமைதி பேரணியில் பங்கேற்றிருந்தனர். அப்போது, முகமூடிகளை அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் சிலர், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து பேரணியில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதனைத் தடுக்கச் சென்ற மற்ற மாணவர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் உடனடியாக அங்கு வந்தனர். ஆனால், போலீஸாரை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷே கோஷ் உட்பட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று நேற்று காலை வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஜேஎன்யுவில் நடந்த மோதல்கள், வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி போலீஸார் குழு ஒன்றை அமைத்துள்ளனர். இக்குழுவினர் இன்று ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்கு வந்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். மோதல் நடந்த விவரம், தாக்கிய நபர்கள் குறித்த அடையாளம், குறித்து விசாரித்தனர். மேலும் மாணவர்கள் வைத்திருந்த ஆதாரங்களையும் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

Tags : attack ,JNU ,Investigation ,Delhi Police , JNU students, Assault, Investigation, Delhi Police
× RELATED பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா...