×

பிரதமர் உட்பட 15 பேரை கொன்ற வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : மத்திய அரசு

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தால் அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

28 ஆண்டுகளாக சிறை வாசம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவர் கைது செய்யப்பட்டு சுமார் 28 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உயர் நீதிமன்றத்தில் நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல்

இந்நிலையில் கடந்த மாதம் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறேன். 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த  3,000க்கு  மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் தமிழக அரசால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை  அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது.ஆனால், அந்த  பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அமைச்சரவை பரிந்துரை அளித்த அடுத்த நாள் என்னை விடுதலை செய்திருக்க வேண்டும். இதுவரை என்னை விடுதலை செய்யாமல் சிறையில் அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமாகும். எனவே, என்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.

மாநில, மத்திய அரசுகள் பதிலளிக்க உத்தரவு

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன்,
 நளினி உள்ளிட்ட 7 பேரை  விடுவிக்க அனுமதி கேட்டு கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு அனுப்பிய மனுவை கடந்த  2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிராகரித்து விட்டதாக கூறி அறிக்கை தாக்கல் செய்தார். மேலும் உள்துறை இணைச் செயலாளர் துபே தமிழக தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், நாட்டின் பிரதமர் உட்பட 15 பேரை கொன்ற வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்காலத்தில் இந்த முடிவு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எல்டிடிஇ உடன் சேர்த்து கடுங்குற்றம் செய்தோரை விடுவித்தால் அது மற்ற கைதிகளுக்கு சாதகமாகி விடும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்த வழக்கில்  மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்த்த நீதிபதிகள் இது தொடர்பாக ஜனவரி 28ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

Tags : government ,killing ,release , High Court, Prime Minister Rajiv Gandhi, Liberation, Central Government, Nalini, Appeal, Petition
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...