×

எடப்பாடி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை... தமிழகத்தில் புதிதாக 3 மாவட்டங்களை உருவாக்க தமிழக அரசு திட்டம்

சென்னை: தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நிர்வாக முறைகளைச் சிறப்பாக செய்வதற்கு ஏதுவாக பெரிய பெரிய மாவட்டங்களை இரண்டு, மூன்று   தொகுதிகளாகப் பிரித்து அவற்றைப் புதிய மாவட்டங்களாக  உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துவந்தது.  

அதன்படி தமிழகத்தில் 32 ஆக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 37ஆக உயர்த்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு; விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி; திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி; வேலுார் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக புதிதாக உருவான மாவட்டங்களின் நிர்வாக பணிகள் தொடக்கிவைக்கப்பட்டு ஆட்சியர்கள், எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் புதிதாக மேலும் 3 புதிய மாவட்டங்களை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து எடப்பாடியை தனி மாவட்டமாக உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக எழுந்து வரும் கோரிக்கையான கோவை மாவட்டத்தில் இருந்து பொள்ளச்சியையும் நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையையும் தனி மாவட்டமாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான அறிவிப்பை நடப்பு தொடரின் விதி எண் 110ன் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த தகவலின் படி புதிதாக 3 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 40ஆக உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Tamil Nadu ,Government ,Mayiladuthurai ,Pollachi ,Edappadi ,districts , Legislative Assembly, Districts, Number, Chief Minister Palanisamy, Edappadi, Pollachi, Mayiladuthurai
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...