×

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ரூ.96 கோடி செலவில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: தமிழகத்தில் ரூ.96 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர்கள் விடுதி கட்டிடம், பள்ளி கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம் அமராவதி நகரில் அமைந்துள்ள சைனிக் பள்ளி வளாகத்தில் 52,924 சதுர அடி பரப்பளவில் ரூ.9 கோடியே 87 லட்சத்து 36 ஆயிரம் செலவில் 288 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள சைனிக் இளநிலை மாணவர்கள் விடுதி கட்டிடத்தை வீடியோ கான்பரன்சிங் மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

மேலும், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், ராமநாதபுரம், நீலகிரி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், திருவாரூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 31 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 60 கோடியே 66 லட்சத்து 55 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வக கட்டிடங்கள், கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர்,
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் கடலூர், திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 11 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்கள்,

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி, பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர், விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் ஆகிய இடங்களில் ஒன்றிய ஆசிரியர் கல்வி நிறுவனத்திற்கு கட்டிடங்கள், கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் ஆசிரியர் இல்ல கட்டிடம் என மொத்தம் ரூ.95 கோடியே 94 லட்சத்து 51 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள சைனிக் இளநிலை மாணவர்கள் விடுதி கட்டிடம், 42 பள்ளி கட்டிடங்கள், 3 ஒன்றிய ஆசிரியர் கல்வி நிறுவன கட்டிடங்கள் மற்றும் ஆசிரியர் இல்ல கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலியாக உள்ள  18 நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை-II பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், பள்ளி கல்வி துறையில் பணிபுரிந்து பணி காலத்தில் காலமான 43 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.இதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் சண்முகம், பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags : buildings ,schools ,Tamil Nadu , Tamil Nadu, school, Rs.96 crore, new buildings, CM
× RELATED 46 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில்,...