×

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மீதான தாக்குதலுக்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை: பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மீதான தாக்குதலுக்கு வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொங்கி எழுந்துள்ள ஜே.என்.யூ. மாணவர்கள், அறப்போராட்டங்களை நடத்த முனைந்தபோது, காவல்துறை அத்துமீறி பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. குண்டர்களும், காக்கிச் சட்டைகளுடன் சேர்ந்து கொண்டு மாணவர்களை கொடூரமாக தாக்கினர்.

ஜே.என்.யூ. மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சதீஷ் சந்திர யாதவ் நேற்று மதவாத வெறி கொண்ட வன்முறையாளர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து மாணவர்கள் கண்டனப் பேரணி நடத்தினர். பாஜ மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. குண்டர்கள் பெரிய பெரிய கற்கள், உருட்டுக் கட்டைகள், இரும்பு தடிகள் கொண்டு பேரணியில் வந்த மாணவர்களை தாக்கி இருக்கிறார்கள்.பல்கலைக்கழகத்தில் நுழைந்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ சனாதனக் கூட்டத்தின் வன்முறைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமாவளவன் (விசிக தலைவர்):ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்துக்குள் துணைவேந்தர் மற்றும் போலீசாரின் அனுமதியோடு ஆதரவோடு நுழைந்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் கம்பிகளால், கற்களால் தாக்கி உள்ளனர். இதில் மாணவர் தலைவர் உட்பட 26 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கரவாத செயலுக்கு காரணமான ஏபிவிபி குண்டர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

அவர்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதித்து ஊக்குவித்த துணைவேந்தர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அதற்கு உடந்தையாக இருந்த காவல் துறைக்குப் பொறுப்பான உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த வன்முறைக்குப் பொறுப்பேற்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள கல்வி வளாகங்களிலும் ஏபிவிபி அமைப்பின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள கண்மூடித்தனமான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கையில் ஆயுதங்களை ஏந்தியபடி முகத்தை மூடிக்கொண்டு கல்வி நிறுவனத்திற்குள் புகுந்த வன்முறை கும்பல் நிகழ்த்தியிருக்கிற வெறியாட்டம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டின் தலைநகரில் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்திற்குள் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த நாட்டிற்கே  தலைகுனிவை ஏற்படுத்தும் இத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

Tags : Leaders ,attack ,teachers ,Jawaharlal Nehru University ,Leaders condemnation attack , Jawaharlal Nehru, University students, teachers, attackers, leaders, condemnation
× RELATED ஜாதி, மத சண்டையை உருவாக்கி குளிர் காய்கிறது பாஜ: கனிமொழி எம்பி தாக்கு