×

நித்தியானந்தா ஆசிரமத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ள மகனை மீட்கக்கோரி தாய் தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு: நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்ததால் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோத காவலில் உள்ள மகனை மீட்கக்கோரி தாய் தொடர்ந்த வழக்கில் தான் ஆசிரமத்தில் விருப்பப்படியே இருப்பதாக பிரணாநந்தா கூறியதால் வழக்கை முடித்துவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்தியானந்தா. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இவர் மீது தொடரப்பட்ட வழக்கில் தற்போது குஜராத் போலீசார் இவரை தேடி வருகிறார்கள். தற்போது நித்தியானந்தாவை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அங்குலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், பல் மருத்துவரான தனது மகன் முருகானந்தம் (வயது 39) கடந்த 2003ல் நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார். அவருக்கு பிரணாநந்தா என்று ஆசிரமத்தில் பெயர் வைத்தார்கள். மகனை சந்திக்க சென்றபோது பிடதி ஆசிரமத்தில் இருந்தவர்கள் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. மகனை நித்தியானந்தா சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளார். எனவே, முருகானந்தத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் அங்குலட்சுமி சார்பில் வக்கீல் சி.பிரகாசம் ஆஜராகி, சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டுள்ள முருகானந்தத்தை தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது, பிரணாநந்தாவை போலீசார் நீதிமன்றத்தில் அஜர்படுத்தினர். அவரிடம் நீதிபதிகள், உங்களின் தாயின் குற்றச்சாட்டு குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு பிரணாநந்தா, தனது விருப்பத்தின் பேரிலேயே நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருப்பதாகவும், யாரும் தன்னை கட்டாயபடுத்தவில்லை என்றும் பதிலளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தன் விருப்பப்படியே ஆசிரமத்தில் இருப்பதாகவும், சட்டவிரோத காவலில் இல்லை என்றும் பிரணாநந்தா தெரிவித்ததால் அவரது தாய் அங்குலட்சுமி தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Tags : Closing ,Nithyananda Ashram Nithyananda , Nityananda Ashram, Retriever, Mother, Case, Icort
× RELATED யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க...