×

70 தொகுதிக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு டெல்லி சட்டசபைக்கு பிப்.8ல் தேர்தல்: பிப்.11ல் வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடக்கிறது; வாக்கு எண்ணிக்கை 11ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. டெல்லி சட்டப்பேரவை ஆயுள் பிப்ரவரி 22ல் முடிவடைகிறது. இந்நிலையில், தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்து உள்ளது. பிப்ரவரி 8ம் தேதி (சனிக்கிழமை) 70 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள் 11ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும் எனவும் இந்திய தேர்தல் ஆணைய தலைவர் சுனில் அரோரா தெரிவித்து உள்ளார்.

தேர்தலுக்கான ஆணையத்தின் முறைப்படி அறிவிப்பு வரும் 14ம் தேதி  வெளியாகிறது. அன்று தொடங்கி வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் ஜனவரி 21ம்  தேதியாகும். வேட்புமனுக்கள் பரிசீலனை மறுநாள் 22ம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற 24ம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் நாள் பிப்ரவரி 8. வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் பிப்ரவரி 11ம் தேதி. தேர்தல் நடைமுறைகள் பிப்ரவரி 13ல் முடிவுக்கு வரும் என தலைமை தேர்தல் ஆணையர் அரோரா கூறியுள்ளார்.

ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் வன்முறை, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் என டெல்லியில் பதற்றம் கூடியுள்ள நிலையில், தேர்தல் சமயத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்வது என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அரோரா கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையத்தின் 3 தலைவர்களும் ஏகமனதாக தீர்மானித்து தேர்தல் தேதியை நிர்ணயம் செய்தோம். சட்டம், ஒழுங்கு பிரச்னையை தேர்தல் ஆணையம் டெல்லியில் உன்னிப்பாக கவனித்து வருகிறது. தேர்தலுக்கு முன்பாக நிலைமை முழுவதும் கட்டுக்குள் வரும் என உறுதியாக நம்புகிறோம்.

தவிர்க்கமுடியாத பட்சத்தில் தேர்தலை ஒத்திவைக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. அவசியம் ஏற்பட்டால் அந்த சமயத்தில் அது பற்றி ஆலோசிக்கப்படும்’’, என்றார். தேர்தல் ஆணையம் நேற்று  வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, சட்டப்பேரவை தேர்தலில் ஒரு  கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136 பேர் வாக்களிக்க உள்ளனர். மேலும் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 11,763 என்றிருந்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை தற்போது 16.89% அதிகரித்து 13,659 ஆகியுள்ளது.

மாநிலத்தின் 70 தொகுதிகளிலும் 80 வயதுக்கு மேலான வாக்காளர்களையும், வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட சிரம்ப்படும் மாற்றுத்திறனாளிகளையும்  தபால் ஒட்டு அளிக்க தேர்தல் ஆணையம் இந்த முறை அனுமதித்து உள்ளது. இதற்காக கடந்த அக்டோபரில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு 33,600 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 20,600 ஒப்புகை சீட்டு இயந்திரமும் பயன்படுத்தப்பட உள்ளது.

* கட்சிகள் நிலவரம்
2015ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளை கைப்பற்றி இமாலய சாதனை படைத்தது. பாஜவுக்கு 3 தொகுதிகள் கிடைத்தன. காங்கிரசால் ஒரு தொகுதியை கூட பெற முடியவில்லை. மாநிலத்திற்கு நடைபெறவுள்ள தேர்தல் பாஜவுக்கும், காங்கிரசுக்கும் அக்னிப்பரீட்சை. 1998ம் ஆண்டுக்கு பின் பாஜவால் மாநிலத்தில் காலூன்ற முடியவில்லை. அதே சமயம் 15 ஆண்டுகளாக கோலோச்சிய காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சியிடம் பரிதாபமாக தோற்றது. எனவே, பாஜவும், காங்கிரசும் இந்த தேர்தலை மிகவும் முக்கியமாக கருதுகின்றன.


Tags : Polling ,constituency ,elections ,Delhi ,Delhi Assembly Election ,Lok Sabha , 70 constituencies, polling, Delhi assembly, Feb 8, Election, Feb 11
× RELATED சென்னையில் தபால் வாக்குப்பதிவு...