நாளை வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் விவரங்களை திரட்டும் பள்ளிக்கல்வித்துறை: விடுப்பு எடுக்கக்கூடாது என எச்சரிக்கை

வேலூர்: நாளை நடக்க உள்ள வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்களின் விவரங்களை திரட்ட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை கை விடுதல், அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய அளவில் நாளை பொது வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. இப்போராட்டத்துக்கு தமிழகத்தில் குறிப்பிட்ட ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக கடந்த சனிக்கிழமை அந்த ஆசிரியர் சங்கங்கள் ஆலோசனை கூட்டங்களையும் நடத்தியுள்ளன. இந்த நிலையில் நேற்று அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் பொங்கல் பண்டிகை விடுமுறை வரவுள்ளது. பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகள் பள்ளிக்கல்வித்துறையால் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேபோல் பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு, சிறப்பு வகுப்புகள் போன்ற பணிகளும் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சிக்கல் ஏற்படும். மாற்று ஏற்பாடுகள் செய்ய பள்ளிக்கல்வித்துறை திணற வேண்டியிருக்கும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தியாவசியமான மருத்துவ விடுப்பு தவிர வேறு காரணங்களுக்காக விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் விவரங்களை திரட்ட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டவர்களின் விவரங்களையும் திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Teachers ,strike ,leave School teachers , Tomorrow Strike, Teachers Details, Schooling, Leave, Warning
× RELATED இணையதள குளறுபடியால் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்