×

போச்சம்பள்ளியில் வாங்காத கடனுக்கு ரூ.5.50 லட்சம் கட்ட கூறிய வங்கி: வாலிபர் தீக்குளிக்க முயற்சி

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில், வாங்காத கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.5.50 லட்சம் கட்டும்படி கூறி, வங்கி கணக்கை முடக்கியதால் ஆத்திரமடைந்த வாலிபர், வங்கி முன்பு தீக்குளிக்க முயன்றார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்(26). கூலி தொழிலாளி. இவர், அங்குள்ள இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கினார். தற்போது ரூ.4 ஆயிரம் உள்ளது. இந்நிலையில், தனது மகளின் மருத்துவ செலவிற்கு பணம் எடுக்க அரசம்பட்டியில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்றார். ஆனால், அவரது ஏடிஎம் கார்டு முடக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அந்த வங்கி மேலாளரிடம் முறையிட்டார். அப்போது, அவரது வங்கி கணக்கு, போச்சம்பள்ளியில் உள்ள வங்கி கிளையால் முடக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

அதன்பேரில், போச்சம்பள்ளியில் உள்ள வங்கிக்கு சென்ற விக்னேஷ், மேலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது, மகளிர் குழு மூலம் அவரது மனைவி ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருப்பதாகவும், அதற்கு ரூ.50 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து ரூ.5.50 லட்சம் கட்டினால் தான், வங்கி கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் என மேலாளர் தெரிவித்தார்.இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், யாரும் மகளிர் குழுவில் உறுப்பினராக இல்லை என்றும், இதுவரை எந்த வங்கியிலும் தான் கடன் வாங்கியது இல்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால், அதுபற்றியெல்லாம் தனக்கு தெரியாது என்று கூறிய வங்கி மேலாளர்,உங்களது பெயரில் தான் கடன் பெறப்பட்டுள்ளது.அதை நீங்கள் கட்டும் வரை,வங்கி கணக்கு முடக்கப்பட்டு தான் இருக்கும் என்றார். இந்நிலையில்,நேற்று மீண்டும் போச்சம்பள்ளி வங்கி மேலாளரை அணுகி, விக்னேஷ் விவரம் கேட்டுள்ளார்.அப்போது, அவர் மீண்டும் அதே பதில் கூறவே, ஆத்திரமடைந்த விக்னேஷ், கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டு,வங்கி முன்பு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த பொதுமக்கள்,அவரை தடுத்து நிறுத்தினர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார்,விக்னேஷை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது,போலீசாரிடம் அவர் கூறுகையில்,‘எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த ஒரு வருடத்திற்கு முன்,புதிய சங்கம் அமைப்பதாக கூறி எங்கள் கிராமத்தை சேர்ந்த 12 பெண்களிடம் ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் வாங்கிக்கொண்டு சென்றார். ஆனால்,அடுத்த நாளே உங்களை வைத்து சங்கம் அமைக்க முடியாது என கூறிய அந்த பெண்,வாங்கிச் சென்ற நகல்களை திருப்பி கொடுத்து விட்டார். ஆனால், நகல் எடுத்து, போலியாக மகளிர் குழு உருவாக்கி அதன் மூலம் பணத்தை கடனாக பெற்றுள்ளார்.எனவே,அவர் மீது போலீசில் புகார் அளிக்க உள்ளேன்,’என்றார்.

Tags : Bank ,Pochampalli Pochampalli , Pochampalli, Rs.5.50 lakh, bank, plaintiff, attempt to fire
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...