×

திம்பம் மலைப்பாதையில் காரை கவிழ்த்த யானை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் நின்ற காரை யானை கவிழ்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம், கர்நாடகத்தை இணைக்கும் சத்தியமங்கலம் -  மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக திம்பம் மலைப்பாதையில் யானைகள்  இரவு நேரத்தில் சுற்றி திரிகின்றன. நேற்று முன்தினம் இரவு 5வது கொண்டை ஊசி வளைவில் ஒரு யானை தனது குட்டியுடன் நடமாடி கொண்டிருந்தது. அப்போது சாலையில் செல்லும் வாகனங்களை துரத்துவதற்கு முயற்சி செய்தது.

யானையின் அருகே சென்று நின்ற ஒரு காரை யானை துரத்தியதால், காரில் சென்ற நபர்கள் அச்சமடைந்தனர். காரின் முன்புறம் வந்து யானை முட்டியதால் கார் கவிழ்ந்தது. இதையடுத்து வாகன ஓட்டிகள் உடனடியாக யானையை துரத்திவிட்டு கவிழ்ந்த காரை தூக்கி நிறுத்தி அதில் இருந்தவர்களை காப்பாற்றினர். நின்ற  நிலையில் கார் கவிழ்ந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மலைப்பாதையில் யானைகள் வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த  கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Timbuktu , Thump, mountain pass, car, topple, elephant
× RELATED துன்பம் தரும் திம்பம் மலைப்பாதை...