×

கரூர் அருகே பரபரப்பு சம்பவம் திமுக பெண் கவுன்சிலரை அதிமுகவினர் காரில் கடத்தல்

கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள 20 வார்டுகளில் அதிமுக 9, பாஜக 1 என 10 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். மீதம் உள்ள 10 வார்டுகளில் திமுக 7, காங் 1, சுயேச்சை 2 பேர் வெற்றி பெற்றனர். கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன் பதவி ஆதிதிராவிடர் பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதிமுகவினர் 10 இடங்களில் வெற்றி பெற்றும் தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் தோல்வியடைந்தனர். எனவே மெஜாரிட்டிக்கு ஒருவரும், தலைவர் பதவிக்கு ஒருவரும் தேவை என்ற நிலையில், திமுகவில் வெற்றிபெற்ற கவுன்சிலரை இழுக்க முடிவு செய்தனர்.  

கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. உறுப்பினர்கள் வந்தபோது திமுக கவுன்சிலர் 7வது வார்டு சந்திரமதி என்பவரை அதிமுகவினர் அழைத்து செல்ல முயன்றனர். இதனால் திமுக, அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டிஎஸ்பி கும்மராஜா திமுகவினரை அப்புறப்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனால் போலீசாருக்கும், திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திமுகவில் வெற்றி பெற்ற சந்திரமதி என்பவரை அதிமுக பிரமுகர் காரில் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டதாக திமுக நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

* அதிமுக கவுன்சிலரை கடத்த சொந்த கட்சியினரே முயற்சி
திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுவில் 11 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் அதிமுக 5, திமுக 3, காங்கிரஸ் 1, சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்றனர். இதில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற 4 பேருடன் 2 சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் அதன் பலம் 6 ஆக உள்ளது. ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி ஆதரவுடன் சுயேட்சை கவுன்சிலரான மகேஷ்குமார் களத்தில் உள்ளார். இந்நிலையில், அதிமுக 2வது வார்டு கவுன்சிலர் அய்யனார், சுயேட்சை கவுன்சிலர் மகேஷ்குமார் தலைவராவதற்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் பதவி ஏற்க முயன்ற அய்யனாரை அதிமுகவினர் பாய்ந்து தடுத்து கடத்திச் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் அய்யனார் தாக்கப்பட்டு அவரது சட்டை கிழிந்தது.


Tags : incident ,councilor ,Karur ,DMK , Karur, incident, DMK female councilor, AIADMK, kidnapping
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்