×

புறக்கணிப்பு ஏன்? கட்சிகள் விளக்கம்

தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி: மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்பது காங்கிரஸின் நோக்கம். மத்திய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பொதுமக்கள் தயாராகிவிட்டார்கள்,  பல இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்திய யூனியன் முஸ்லிக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர்: குடியுரிமை திருத்த சட்டம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது. கேரளாவில் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி  குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று சொல்லி இருக்கின்றார்கள். தமிழகத்திலும் இந்த சட்டம் தொடர்பாக அனைத்து கட்சிகளின் கருத்துக்கள் கேட்கப்படும் வகையில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான தமீமுன் அன்சாரி: சிஏஏ, என்.பி.ஆர், என்ஆர்சி ஆகிய சட்டங்களை தமிழ் மண்ணிலே அமல்படுத்தக் கூடாது. மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள் தமிழகமும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அமமுக பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான டிடிவி தினகரன்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்ததை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்லாமியர்களுக்கும், இலங்கையில் இருந்து இங்கு குடியேறி இருக்கிற மக்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். கொங்கு இளைஞர் பேரவை கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான தனியரசு: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டனை பெற்று வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் ஒப்புதல் அளிக்காத ஆளுநரை கண்டித்து ஆளுநர் உரையை புறக்கணிக்கிறேன்.

Tags : parties , Why the boycott? Parties, description
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...