×

3 நாள் மட்டுமே பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு கூடியது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். தொடர்ந்து அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் தனபால் படித்தார். அவர் படித்து முடித்ததும் 11.56 மணியளவில் அன்றைய கூட்டம் நிறைவடைந்தது. கூட்டம் முடிந்த பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு சபாநாயகர் ப.தனபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

சட்டப்பேரவையில் 7ம் தேதி (இன்று) காலை மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். அதன் பின்னர் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படும். அதைத் தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்படும். அதன் மீதான எம்எல்ஏக்களின் விவாதம் தொடங்கும். தொடர்ந்து மாலையில் 5 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடும். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடக்கும். 8ம் தேதி(நாளை) விவாதம் தொடரும். எதிர்க்கட்சி தலைவர் பேசுவார். 9ம் தேதி பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான 2வது துணை பட்ஜெட் அறிக்கை அளிக்கப்படும். அதை தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் பதிலுரை நிகழ்த்துவார்.

பின்னர் 2019-2020ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான 2வது துணை பட்ஜெட் அறிக்கையில் கூறப்படும் மானியக் கோரிக்கைகள் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படும். அதோடு மேலும் பல சட்ட மசோதாக்களும் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும். ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு அவை கூடும். கூட்டம் தொடங்கியதும் தினமும் கேள்வி, பதில் இருக்கும். 9ம் தேதி வரை சட்டப்பேரவை நடக்கும். குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மனு கொடுத்துள்ளார். அது எனது ஆய்வில் உள்ளது. அவை விதியின்படி அதில் என்ன செய்ய முடியும்? என்று பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : council meeting , 3 Day, Conference, Meeting
× RELATED கொட்டாம்பட்டி பகுதியில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்