×

ஆஸ்திரேலியா காட்டுத்தீ மீட்பு அமைப்புக்கு 9,800 கோடி நிதி : பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய காட்டுத்தீ மீட்பு அமைப்புக்கு 9,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நியூ சவுத்வேல்ஸ், விக்டோரியா ஆகிய மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. 1500க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் தீக்கிரையாகின. பல்லாயிரக்கணக்கான விலங்குகள் தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. தீயைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்ட தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, `தேசிய காட்டுத்தீ மீட்பு அமைப்பு’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பு தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய ஆஸ்திரேலியா பிரதமர் மோரிசன் கூறியதாவது:

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காட்டுத்தீயினால் ஏராளமான குடும்பங்கள், விவசாயிகள், தொழில்முனைவோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் தேசிய காட்டுத்தீ பேரிடர் அமைப்புக்கு முதல் கட்டமாக ₹9,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் மாகாண, யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து செயல்படும். மத்திய அரசின் கீழ் இந்த அமைப்பு செயல்படும். தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கட்டமைக்கும் பணியில் நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. ராணுவப்படைகளும் மக்களை பாதுகாப்பதில் அயராது உழைத்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோரிசன் கூறினார்.

திடீர் மழையால் ஓரளவு ஆறுதல்


ஆஸ்திரேலியாவில் பற்றியெறியும் காட்டுத்தீயை அணைக்க பெரும் முயற்சியை அந்நாட்டு ராணுவம், தீயணைப்புத்துறை, வனத்துறை என்று பல்வேறு துறைகள் மேற்கொண்டிருந்தாலும், அதனால் பெரிய அளவில் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் நேற்று சிட்னி முதல் மெல்போர்ன் வரையில் பரவலாக மழை பெய்தது. இதனால் ஓரளவு காட்டுத்தீ அணைந்தது. ஆனால், பல பகுதிகளில் காட்டுத்தீ கொடூர வேகத்தில் பரவி வருவதால் இரண்டு நாட்களில் மேலும் தீயின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tags : Scott Morrison ,Australia , Prime Minister Scott Morrison , $ 9,800 crore , Australia's wildfire rescue
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...