×

பல லட்சம் ரூபாய் மோசடி கோயில் கணக்காளர் கைது

தண்டையார்பேட்டை:  அறநிலைய துறைக்கு சொந்தமான கோயிலில்  பல லட்சம் ரூபாய் மோசடி செய்த  கோயில் கணக்காளரை போலீசார் கைது செய்தனர். சென்னை பூக்கடை தங்கசாலை பள்ளியப்பன் தெருவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அருணாச்சலேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 15 பேர் வேலை பார்க்கின்றனர். கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்த கோயிலில் செயல் அலுவலராக ராதாமணி (52) உள்ளார். இக்கோயிலில்  பணிபுரியும் ஊழியர்களுக்கு, விசேஷமான பண்டிகை தினங்களில் ஒரு மாத சம்பளம் ஊக்க தொகையாக வழங்கப்படுவது வழக்கம். இதனை, இங்கு கணக்காளராக பணிபுரியும் பொன்னேரி என்ஜிஓ நகர் பால விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த பிரபாகர் என்பவர்  கடந்த மூன்று ஆண்டுகளாக ஊழியர்களுக்கு வழங்காமல் மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில், அறநிலைய துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, ஊழியர்களின் கையெழுத்தை போலியாக போட்டு இவர் சிறப்பு ஊக்க தொகையை பெற்று கொண்டுள்ளார், என்பது தெரியவந்தது. இதனால் அவர்  தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதுகுறித்து செயல் அலுவலர் ராதாமணி யானைகவுனி குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரிடம்  விசாரணை செய்ததில், ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்க தொகை கொடுக்காமல் ஏமாற்றியது  தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Temple Accountant ,Temple Accountant for Fraud , Temple Accountant arrested, fraud
× RELATED மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட...