×

தாம்பரம் முத்துரங்க முதலி தெருவில் ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் நெரிசல்

தாம்பரம்: தாம்பரம் முத்துரங்க முதலி தெருவில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்கு தாம்பரம் முத்துரங்க முதலி தெருவில் நகராட்சி அலுவலகம், கோயில், ஓட்டல்கள், தபால் நிலையம், ஏராளமான கடைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. தாம்பரம் மார்க்கெட் பகுதியான சண்முகம் சாலை,  பெரியார் தெரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும், மேற்கு தாம்பரத்தில் இருந்து தாம்பரம் பேருந்து நிலையம், ரயில்நிலையம், கிழக்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த சாலையை பயன்படுத்துவதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் டாஸ்மாக் கடை உள்ளதால் இங்கு வரும் குடிமகன்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையை ஆக்கிரமித்து ஆங்காங்கே நிறுத்றுகின்றனர். இதேபோல், கடைக்கு மதுபாட்டில்களை கொண்டுவரும் கனரக வாகனம் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் அவ்வழியாக பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருவதாலும், அவ்வாறு ஆக்கிரமித்து அமைத்துள்ள கடைகளுக்கு வரும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கனரக வாகனங்கள் சாலையில் அங்காங்கே நிறுத்தி வைக்கப்படுவதால் பொதுமக்கள் எளிதாக செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அங்குள்ள டாஸ்மாக் கடையை  அகற்ற வேண்டும், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இ-சேவை மையம், வீட்டு வரி, குடிநீர் வரி, நகராட்சி சம்மந்தமான புகார்கள் மற்றும் உதவிகளுக்காக முத்துரங்க முதலி தெருவில் உள்ள தாம்பரம் நகராட்சி அலுவலகத்திற்கு வருபவர்கள், இந்த முத்துரங்க முதலி தெரு வழியாக நடந்தோ அல்லது வாகனங்களிலோ வருபவர்கள், ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசலில் சிக்கி சிரமப்படும் நிலை உள்ளது.

குறிப்பாக, இந்த தெருவில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு வரும் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து ஆங்காங்கே நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. ஆக்கிரமிப்பு கடை வைத்திருப்பவர்கள் மாதம்தோறும் நகராட்சி அதிகாரிகளுக்கு கப்பம் கட்டி விடுவதால், அவர்கள் மக்களின் தவிப்பை கண்டுகொள்வதே இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அங்குள்ள டாஸ்மாக் கடை மற்றும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவேண்டும்,’’ என்றனர்.

Tags : shops ,Tambaram Muthuranga Mudali Street , Tambaram Muthuranga Mudali Street, overcrowded ,aggressive shops
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி