×

கோவிந்தா... கோவிந்தா... கோஷம் விண்ணை பிளக்க திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

சென்னை: கோவிந்தா... கோவிந்தா... கோஷம் விண்ணை பிளக்க திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதல், சுமார் ஒரு லட்சத்த்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  108 வைணவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியில் ராபத்து உற்சவம் என்று கூறப்படும் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.  இந்தாண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் கடந்த 27ம் தேதி தொடங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, ராபத்து முதல் நாளான நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக, நள்ளிரவு 12 மணியளவில் இருந்து 2 மணி வரையில் விஸ்வரூபம், அலங்காரம் மற்றும் தனூர் பூஜைகள் நடந்தன. அதிகாலை 4 மணிக்கு உற்சவர் மகா மண்டபத்தில் இருந்து உள்பிரகாரம் வழியாக வலம் வந்து அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் அடைந்தார். 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, எதிரே எழுந்தருளியிருக்கும் நம்மாழ்வாருக்கு காட்சி தந்தார். பின்னர் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன், நம்மாழ்வாருக்கு மரியாதை செய்யும் விதமாக, வேத திவ்ய பிரபந்தம் தொடங்கியது.

இதையடுத்து காலை 5 மணி முதல் 5.45 வரை திருவாய்மொழி மேல் மண்டபத்தில் உள்ள புண்ணியகோடி மண்டபத்தில் வைர அங்கியுடன் உற்சவர் எழுந்தருளினார். சொர்க்க வாசல் திறப்பை காண  நேற்று முன்தினம் இரவு 11 மணி முதலே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். முன்கோபுரம் வழியாக பொது தரிசனத்திற்கும், பின் கோபுரம் வழியாக சிறப்பு தரிசனத்திற்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று எழுப்பிய கோஷம் விண்ணை பிளக்க வைத்தது. பின்னர் காலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து இரவு 10 மணிக்கு உற்சவர் அலங்கார திருமஞ்சனமும், இரவு 12 மணிக்கு நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடும் நடந்தது.  இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை பக்தர்கள் வெளிப்புறத்தில் இருந்து பார்க்கும் பொருட்டு கோயிலில் கிழக்கு மற்றும் மேற்கு மாட வீதிகளில் பிரமாண்டமான எல்இடி திரை அமைக்கப்பட்டிருந்தது. கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு குங்குமம், கற்கண்டு, லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டிருந்தன.

விழாவில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும், நான்கு இடங்களில் மருத்துவ முதலுதவி மையமும் அமைக்கப்பட்டது. மேலும், ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பபட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்து. இந்த விழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயில், கேசவ பெருமாள் கோயில்  உட்பட   அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

பரமபத வாசல்

ராபத்து உற்சவம் முதல் நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து, நாளை முதல் 11ம் தேதி வரையும் மற்றும் 13ம் தேதி மாலை 5.45 மணிக்கும், 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை காலை 9 மணிக்கும் பரமபதவாசல் சேவை நடக்கிறது. தொடர்ந்து பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை தெப்ப உற்சவம் நடைபெறும்.


Tags : Govinda ,Thiruvallikeni Parthasarathy temple , Thiruvallikeni Parthasarathy Temple ,Govinda,Govinda
× RELATED ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா...