×

தென் ஆப்ரிக்காவுக்கு 438 ரன் இலக்கு

கேப் டவுன்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், தென் ஆப்ரிக்காவுக்கு 438 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 269 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 223 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன் 5 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து, 46 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன் எடுத்திருந்தது. டோம் சிப்லி - கேப்டன் ஜோ ரூட் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 116 ரன் சேர்த்தடு குறிப்பிடத்தக்கது. ரூட் 61 ரன் எடுத்து வெளியேற, டொமினிக் பெஸ் டக் அவுட்டானார்.

டோம் சிப்லி (85*), பென் ஸ்டோக்ஸ் இருவரும் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்தது. அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த ஸ்டோக்ஸ் 72 ரன் (47 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி மகராஜ் பந்துவீச்சில் வான் டெர் டஸன் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த போப் 3, பட்லர் 23, சாம் கரன் 13 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
தென் ஆப்ரிக்கா 111 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 391 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மிக நிதானமாக பேட் செய்து தனது முதல் சதத்தை பதிவு செய்த தொடக்க வீரர் டோம் சிப்லி 133 ரன் (311 பந்து, 19 பவுண்டரி, 1 சிக்சர்), ஸ்டூவர்ட் பிராடு 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் நோர்ட்ஜே 3, ரபாடா, மகராஜ் தலா 2, பிரிடோரியஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 438 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சை தொடங்கியது. பீட்டர் மாலன், எல்கர் இருவரும் துரத்தலை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. எல்கர் 34 ரன் எடுத்து டென்லி பந்துவீச்சில் பட்லர் வசம் பிடிபட்டார். ஹம்சா 18 ரன்னில் வெளியேறினார். 4ம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்ரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்துள்ளது. பீட்டர் மாலன் 63 ரன், மகராஜ் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.


Tags : South Africa , 438 run target ,South Africa
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...