×

ஜேஎன்யூ தாக்குதல் சம்பவம் குண்டர்களால் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை : சோனியா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலையில் நடந்த வன்முறை சம்பவமானது, இந்திய இளைஞர்கள் மீது ஆளும் மோடி அரசின் தூண்டுதலின்பேரின் குண்டர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்த மர்மநபர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி விடுத்துள்ள அறிக்கையில், “இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்காதவாறு தினந்தோறும் ஒடுக்கப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவமானது, இந்திய இளைஞர்கள் மீது மோடி அரசின் தீவிரமான தூண்டுதலால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறை. இது மோசமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான இந்த தாக்குதல் ரத்தத்தை உறைய வைப்பதாக உள்ளது. இந்தியா முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களில் தினந்தோறும் போலீசார் அல்லது ஆளும் பாஜ அரசின் ஆதரவு பெற்ற கும்பல்களால் தாக்குதல் நடத்தப்படுகின்றது” என்று கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா: ஜேஎன்யூவில் நடந்த தாக்குதல்  குறித்து நீதிமன்ற விசாரணை நடத்தப்படவேண்டும்.  இந்த சம்பவத்தில் அரசின் பங்கு, ஜேஎன்யூ நிர்வாகம் மற்றும் டெல்லி போலீசாரின் பங்கு குறித்து விசாரிக்கபடவேண்டும். ஜேஎன்யூவில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது 1933ம் ஆண்டு நடந்த நாஜி ஜெர்மனி ஆட்சியை 90 ஆண்டுகளுக்கு பின் நினைவுபடுத்துவதாக உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: நாட்டில் என்ன நடந்தாலும் அமைதியை குலைப்பதாகவே உள்ளது.  நான் கூட ஒரு காலத்தில் மாணவ அரசியலில் ஈடுபட்டு இருந்தேன். ஆனால் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீது இதுபோன்ற ஒரு தாக்குதலை நான் இதுவரை பார்த்தில்லை. ஜேஎன்யூவில் மாணவர் சமுதாயம் மீது நடத்தப்பட்டது பாசிச தாக்குதலாகும். பாஜவுக்கு எதிராக யார் குரலை உயர்த்தினாலும் அவர்கள் தேசவிரோதிகள் அல்லது பாகிஸ்தானியர்கள் என பெயர்சூட்டப்படுவார்கள்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிக்கை: ஜனாதிபதி, உடனடியாக ஜேஎன்யூ.வின் துணைவேந்தர் ஜகதீஷ் குமாரை பணிநீக்கம் செய்ய வேண்டும் மற்றும் வளாகத்தில் அமைதி திரும்பியதை உறுதி செய்ய வேண்டும்.

காங்கிரஸ், ஏஏபியின் சதி

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “ஜேஎன்யூவில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் இடதுசாரிகளில் உள்ள சிலர் குறிப்பாக பல்கலைக்கழகங்களில், வன்முறைச்சூழல் மற்றும் நாட்டில் அமைதியின்மையை உருவாக்க முயற்சிக்கின்றனர். இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். வன்முறை தாக்குதல் நடந்த 10 நிமிடங்களில் யோகேந்திர யாதவ் மற்றும் சில அரசியல் தலைவர்கள் பல்கலை வளாகத்திற்குள் வந்துள்ளனர். இது எப்படி சாத்தியமாகும்? இதுபோன்றவர்கள் பல்கலைக்கழங்களில் வேண்டுமென்றே அமைதியின்மையை ஏற்படுத்துகின்றனர். இது ஒரு சதித்திட்டமாகும்” என்றார்.

Tags : attack ,Sonia Gandhi ,youths ,JNU , JNU attack,Violence unleashed,Sonia Gandhi
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!