×

அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது மிகப்பெரிய அளவில் பொருளாதார தடை விதிக்கப்படும் : அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றினால் அந்நாட்டின் மீது மிகப்பெரிய அளவில் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே கடந்த வெள்ளியன்று காலை அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரான் புரட்சிகர ராணுவப்படையின் தளபதி மேஜர் ஜெனரல் காஸ்சிம் சுலைமானி கொல்லப்பட்டார். மேலும் துணை தளபதி ஹசீத் அல் ஷாபியும் உயிரிழந்தார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவை தாக்க நினைத்தால் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்களை சர்வநாசம் ஆக்குவோம் என்று சனியன்று இரவு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், ஈராக் நாடாளுமன்றத்தில் அமெரிக்க படைகளை வெளியேற்றுவது தொடர்பான தீர்மானம் நேற்று முன்தினம் விவாதத்துக்கு வந்தது. இதையடுத்து அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்குவதற்காக, அந்நாட்டு அரசு அமெரிக்காவிடம் ராணுவ உதவியை கடந்த 2015ல் கேட்டிருந்தது. அதன்படிதான் 5,200 ராணுவ வீரர்களை அமெரிக்கா அரசு அங்கு நிறுத்தியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றினால், அந்நாட்டின் மீது மிகப்பெரிய அளவில் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

புளோரிடாவில் உள்ள மரலாகோவில் இருந்து மேரிலேண்ட் செல்லும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈராக்கில் மிகவும் விலையுயர்ந்த விமான தளத்தை கொண்டுள்ளோம். அதனை கட்டுவதற்கு பல பில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது. நாங்கள் வெளியேறினால் அதற்கான இழப்பீட்டை அவர்கள் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும். வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றினால்  முன்னெப்போதும் பார்த்திராத வகையில் மிகப்பெரிய அளவில் பொருளாதார தடைகள் விதிக்கப்படும்” என்றார்.

Tags : Trump ,US ,Iraq ,forces , Large-scale economic embargo , Iraq , US forces , President Trump warns
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்