வேலாயுதம்பாளையத்தில் பைக்கில் வந்து குழந்தை கடத்தல்: தாய் போலீசில் புகார்

கரூர்: கரூர் அருகே வேலாயுதம்பாளையத்தில்  பைக்கில் வந்து குழந்தையை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் புகளூர் பகுதியில் வசிப்பவர் கார்த்திக். சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு மிதுன் என்ற 2 வயது மகன் உள்ளார். நேற்று மாலை கணவனும், மனைவியும் குழந்தை மிதுனுடன் தவிட்டுப்பாளையம் காவிரி ஆறு மேம்பாலத்திற்கு கீழ் குளிப்பதற்காக சென்றனர். அங்கு விஜயலட்சுமி துணி துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த ஒரு வாலிபர் கார்த்திக், விஜயலட்சுமி ஆகியோருடன் பேச ஆரம்பித்தார்.  பின்னர் அந்த வாலிபர் குழந்தை மிதுனை தூக்கி கொஞ்சியபடி இருந்தார்.

சிறிது நேரத்தில் அந்த பைக் ஆசாமி  கார்த்திக்கை பைக்கில் மது குடிக்க அழைத்து சென்றார். பின்னர் அரைமணி நேரத்தில்  அந்த பைக் ஆசாமி திரும்பி வந்து, விஜயலட்சுமியிடம், உங்கள் கணவர் குழந்தையை அழைத்து வரும்படி  கூறினார் என்று கூறவே, விஜயலட்சுமியும் அவரை நம்பி குழந்தையை கொடுத்தனுப்பினார். அந்த வாலிபரும் பைக்கில் குழந்தை மிதுனை அழைத்து சென்றார்.

சிறிது நேரம் கழித்து கார்த்திக் திரும்பி வந்தார். அவரிடம் , விஜயலட்சுமி, நீங்கள் அழைத்து வர சொன்னதாக குழந்தையை அவர் பைக்கில் கூட்டி சென்றாரே  குழந்தை எங்கே ? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் கடைக்கு போயிட்டு வருகிறேன். நான் குழந்தையை அழைத்து வர சொல்லவில்லையே என்றார். அப்போதுதான், கணவன், மனைவி இருவருக்கும். பைக்கில் வந்த ஆசாமி தங்கள் குழந்தையை கடத்தி சென்றுவிட்டான் என்று புரிந்தது. இதுகுறித்து விஜயலட்சுமி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார்  வழக்கு பதிந்து குழந்தையை கடத்தி சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.

Related Stories:

>