×

பணம் கையாடல், கட்டண முறைகேடு, உண்டியல் உடைப்பு, கோபுர கலசம் திருட்டு: ராமேஸ்வரம் கோயிலில் என்ன தான் நடக்கிறது?..கடும் அதிருப்தியில் பக்தர்கள், பொதுமக்கள்

ராமேஸ்வரம்: பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருட்டு, பணம் கையாடல், கட்டணச்சீட்டு முறைகேடு, ஊழியர்கள் ஒழுங்கீனம் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்வதால், உயரதிகாரிகள் விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில் பிரபலமானது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் ஆண்டு முழுவதும் இங்கு ஆன்மீக பயணம் வருவது வழக்கம். இந்தக் கோயிலில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் பல்வேறு சம்பவங்களால் கோயில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மீது பக்தர்கள், பொதுமக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயிலில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி செலுத்தியதில் ரூ.78 லட்சம் கையாடல் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரகசிய பாஸ்வேர்டு எண்களை பயன்படுத்தி தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக  பணியாற்றிய நபர் ரூ.78 லட்சத்தை கையாடல் செய்ததும், இதற்கு கோயிலில் பணியாற்றும் சக ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பாஸ்வேர்டு... ‘பெயில்’வேர்டு...

கோயில் நிர்வாக வங்கி கணக்குகளை கையாளும் அலுவலருக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய ரகசிய பாஸ்வேர்டு எண் தற்காலிக பணியாளருக்கு தெரிந்திருந்ததும், பல ஆண்டுகளாக வங்கி கணக்கு பணப்பரிமாற்றத்தை அவர் பார்த்து வந்த உண்மையும் வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் கோயில் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், பக்தர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தரிசனத்திலும் முறைகேடு

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் கட்டண சீட்டில் முறைகேடு நடந்ததாக அடுத்த குற்றச்சாட்டு கிளம்பியது. கட்டணச் சீட்டு வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு கையடக்க கருவி மூலம் பல மாதங்களாக வசூலான தொகை கோயில் நிர்வாகத்திடம் முறையாக செலுத்தப்படாமல் ஊழியர்கள் சிலரால் கையாடல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இச்சம்பவங்கள் குறித்து ஊழியர்களிடம் விசாரணை செய்த கோயில் நிர்வாக அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுப்பதற்கு காவல் துறையிடம் புகார் செய்த நிலையில், பெரிய அளவில் நடவடிக்கை எதுவும் இதுநாள் வரை எடுக்கப்படவில்லை. இதுவரை விசாரணை மட்டத்திலேயே உள்ளது.

உண்டியல் கொள்ளை

கடந்த ஆண்டு ஆக. 23ம் தேதி ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான தனுஷ்கோடி கோதண்டராமர் சுவாமி கோயில் கதவு உடைக்கப்பட்டு உள்ளே சுவாமி கருவறைக்கு முன்பு இருந்த உண்டியலை உடைத்து பணம் கொள்ளை போன சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு இதே கோயிலில் கோபுர கலசம் திருடுபோன சம்பவம் நடைபெற்றது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறந்து போகலாமா...?

500 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் இருந்த லெட்சுமணர் சிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது. இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே ராமேஸ்வரம் கோயில் நிர்வாகமும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் மறந்துவிட்டனர். கால சுழற்சியால் பொதுமக்கள் மனதிலும் இது மறைந்து போனது.

நடவடிக்கை ‘நஹி...’

தற்போது 4 மாத இடைவெளியில் இக்கோயிலில் உண்டியல் திருட்டு, கோபுர கலசம் திருட்டு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.  ஒரே கோயிலில் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ள போதும் நடவடிக்கை என்பது பெயரளவிலேயே உள்ளதால் கோயிலின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது, திருட்டு, கையாடல் சம்பவங்கள் நடப்பது ஒருபுறம் என்றால் கோயிலில் பணியாற்றும் ஊழியர்களும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதும் அவ்வப்போது நடக்கிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வந்தாலும் எதற்குமே முறையான நடவடிக்கை எடுக்கப்படாமல் கோயில் நிர்வாகமும், அறநிலையத்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையளிப்பாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கோயிலில் நடைபெற்று வரும் திருட்டு, கையாடல் உள்ளிட்ட முறைகேடான செயல்களை அரசு உயரதிகாரிகள் முறையான விசாரணை செய்து ராமநாதசுவாமி கோயிலின் புகழுக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு பலமாகுமா

கோதண்டராமர் சுவாமி கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி சிலை திருடு போன சம்பவத்திற்கு இன்று வரை விடை கிடைக்காத நிலையில் இக்கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்தவும், இரவு மற்றும் பகல் நேரங்களில் பாரா பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ராமேஸ்வரம் போலீசார் தரப்பிலும் கோயில் பாதுகாப்பிற்கு கூடுதல் செக்யூரிட்டி நியமிக்கவும், சர்ச் லைட் உள்ளிட்ட வசதிகளை செக்யூரிட்டிகளுக்கு செய்து தரவும் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் கோயில் நிர்வாகம் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாததால் ஆள் அரவமற்ற பகுதியிலுள்ள இக்கோயிலில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெறுகிறது.

விசாரணைக்கு முட்டுக்கட்டை

கோயில் ஊழியர்கள் பணம் ரூ.78 லட்சம் கையாடல் நடந்த சம்பவத்தில், முதலில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட கிரைம் போலீசார், குற்றச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் தற்காலிக கம்ப்யூட்டர் பணியாளரையும், கோயில் ஊழியர் ஒருவரையும் கைது செய்தனர். விசாரணையில் கோயில் ஊழியர்கள் சிலருக்கும் தொடர்பு உள்ளதாக தெரிய வந்த நிலையில் மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளை இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது. தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோல் சுவாமி தரிசனத்திற்கு கட்டண டிக்ெகட் வழங்கும் கையடக்க கருவி வசூலில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆனால் ஆளுங்கட்சியினரின் முட்டுக்கட்டையால் விசாரணையில் இரண்டு சம்பவங்களிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Rameswaram Temple ,Bundle Break ,temple ,theft ,tower , Money Laundering, Payment Abuse, Bundle Break, Tower Collection, Rameswaram Temple
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...