×

மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி: அமெரிக்கா விமானப்படை நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரி சுலைமானி கொல்லப்பட்டார். இதனால், அமெரிக்கா–ஈரான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. பொறுமையை கடைப்பிடிக்குமாறு இந்தியா ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. தொடர்ந்து, அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் மிக தீவிரமான திருப்பத்தை அடைந்துள்ளதாகவும், போர் பதற்றம் இந்தியாவுக்கு கவலை அளிப்பதாக உள்ளது என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, எண்ணெய் வளம் மிக்க வளைகுடா பகுதியில் பதற்றம் நீடிப்பது உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஷெரீபுடன் உடன் தொலைபேசியில் பேசிய அவர், இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் மிகவும் கவலைக்கிடமானது என்ற  இந்தியாவின் கருத்தை தாம் ஈரான் அமைச்சருடன் பகிர்ந்து கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் போர் பதற்றம் உள்ளிட்டவற்றை தவிர்க்க இந்தியா தனது பங்களிப்பை அளிக்கும் என்று தாம் உறுதி அளித்துள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். இதேபோன்று ஓமன் வெளியுறவு அமைச்சர் யூசப் அலறியுடன் ஈரான் விவகாரத்தை விவாதித்த அவர், வளைகுடா பகுதியில் பாதுகாப்பான சூழலும், நிலைத்தன்மையும் நீடிக்க வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பகிர்ந்து கொண்டுள்ளார்.


Tags : Jaishankar ,Foreign Minister ,India ,Middle East ,Jaishankar Middle East , Middle East, War Tension, India, Concern, Foreign Minister Jaishankar
× RELATED சொல்லிட்டாங்க…