×

அப்துல்லாபுரம்- தார்வழி சாலையை ஒப்படைப்பதில் இழுபறி: வேலூர் விமான நிலையம் இந்தாண்டிலாவது செயல்பாட்டுக்கு வருமா?....சட்டமன்ற கூட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு

வேலூர்: மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையத்தை பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மொத்தம் உள்ள 120 ஏக்கர் பரப்பளவில் முதற்கட்டமாக ரூ.32.52 கோடியில் மேம்படுத்தி சிறிய ரக விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக வேலூர் விமான நிலையத்தில் டெர்மினல் பில்டிங், ரன்வே, வாகன நிறுத்துமிடம், விமான நிலைய கட்டிடங்கள், துணை கட்டிடங்கள், மின்சார கட்டிட பணிகள் 95 சதவீதம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஆனால் விமான நிலையத்தின் நடுப்பகுதியில் அப்துல்லாபுரம்- தார்வழி சாலை வருவதால் அந்த சாலையை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு பதிலாக விமான நிலையத்தை சுற்றி புதிய சாலை அமைப்பதற்காக ரூ.1.15 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய கேட்டு தமிழக அரசுக்கு நெடுஞ்சாலைத்துறை அறிக்கை அனுப்பி வைத்தது. ஆனால் சாலையை முறையாக போக்குவரத்துதுறை ஒப்படைக்க வேண்டும் என்றும், அதற்கான பணிகளை அவர்கள் தான் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல மாதங்களாக அந்த சாலை ஒப்படைப்பதில் தொடர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் புத்தாண்டு தொடங்கி உள்ள நிலையில் இந்தாண்டிலாவது வேலூரில் இருந்து விமானம் சேவை தொடங்குமா என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்துதுறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னைக்கும், பெங்களூருக்கும் கடந்த புத்தாண்டில் இருந்து சிறிய ரக விமானத்தை இயக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. அப்துல்லாபுரம்- தார்வழி சாலை ஒப்படைப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. கலெக்டர், டிஆர்ஓ போன்றவர்கள் மாவட்டத்தின் சார்பில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து துறை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளனர். ஆனால் இதுவரை அதற்கான பதில் வரவில்லை. இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதால் புதிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு உள்ளது. அப்போது வேலூர் விமான நிலையத்துக்கு தேவையான சாலையை ஒப்படைத்துவிட்டு, புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் விமான நிலையம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று தெரியவில்லை. முதலில் கடந்த புத்தாண்டு முதல் தொடங்குவதாகவும், பின்னர் ஜூன் மாதம் தொடங்குவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்காக அனைத்து பணிகளும் 95 சதவீதம் முடிந்துள்ளது. இந்த ஆண்டு புத்தாண்டே வந்துவிட்டது. ஆனால் இந்த சாலை பிரச்னை எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை. தமிழக அரசு தான் இந்த விஷயத்தில் தீவிரம் காட்ட வேண்டும். அல்லது எம்எல்ஏக்கள் எம்பிக்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Highway: Will Vellore Airport Be ,road ,Will Vellore airport ,Abdulapuram-Darwali , Abdullapuram, Darwali Road, Vellore Airport, Finance
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...