×

விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல், மேட்டூர், ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

பென்னாகரம்: வார விடுமுறை தினத்தையொட்டி, ஒகேனக்கல், மேட்டூர் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலத்தில் மக்கள் குவிந்தனர். பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு தொடர் விடுமுறையால் சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். விடுமுறையின் இறுதி நாளான நேற்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்தனர். காலை முதலே கார், வேன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒகேனக்கல்லில் திரண்டனர். இதனால், எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காணப்பட்டது. அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், காவிரி ஆற்றில் பரிசலில் உல்லாச சவாரி செய்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். ஒகேனக்கலில் நீர்வரத்து 2500 கனஅடியாக உள்ள நிலையில், ஆற்றில் ஆங்காங்கே மக்கள் குடும்பத்துடன் குளித்து குதூகலித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், பரிசல் ஓட்டிகள் மற்றும் மசாஜ் தொழிலாளர்களுக்கு அதிக வருவாய் கிடைத்தது.

இதேபோல், சேலம் மாவட்டம் மேட்டூரில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சேலம் மாவட்டம் மட்டுமின்றி அண்டைய மாவட்டங்களான ஈரோடு, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா வந்திருந்தனர். மேட்டூர் அணையில் பொழுது போக்கிய சுற்றுலா பயணிகள், அணை முனியப்பன் சுவாமியை வழிபட்டனர். பின்னர், தாங்கள் கொண்டு வந்த உணவினை குடும்பத்தோடு சாப்பிட்டு மகிழ்ந்தனர். சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று சுற்றுலா தலமான ஏற்காட்டிற்கும் நேற்று சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்தது. தமிழகம் மட்டுமின்றி அண்டைய மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் சுற்றுலா வந்திருந்தனர். ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா,ஏரிப்பூங்கா மற்றும் மான் பூங்காவை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் பக்கோடா பாய்ண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பொழுதுபோக்கினர். பின்னர், மாலை வேளையில் அனைவரும் ஒரே நேரத்தில் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால், போக்குவரத்து அதிகரித்ததால் வாகன நெரிசல் ஏற்பட்டது. உள்ளூர்வாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags : holiday season ,Yercaud ,Mettur ,Okkanekal , Holidays, Okenakkal, Mettur, Yercaud, Tourists
× RELATED மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்