×

சபரிமலை சீசன் காரணமாக வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்: சிப்ஸ் தயாரிக்க நாட்டு வாழைக்காய்களுக்கு வரவேற்பு

தேனி: சபரிமலை சீசன் காரணமாக கேரளாவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இவர்கள் கேரள சிப்ஸ்களை விரும்பி வாங்குவதால், சிப்ஸ் தயாரிக்க பயன்படும் நாட்டுரக (சக்கை) வாழைக்காய்கள் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்கின்றன. இதனால் விலை மூன்று மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது. சபரிமலை சீசன் காரணமாக வடமாவட்டங்கள், வட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கேரளாவில் குவிந்து வருகின்றனர். அங்கு இவர்கள் முதலில் தேடுவது கேரள சிப்ஸ்களை தான். அந்த அளவு கேரளாவில் தேங்காய் எண்ணெய்யில் தயாரிக்கப்படும் சிப்ஸ் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக உள்ளது. அதற்காக தேனி மாவட்டத்தில் இருந்து வாழைக்காய்களை அதிகளவில் கொள்முதல் செய்கின்றனர்.

இதுகுறித்து வாழை வியாபாரி சிதம்பரம் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் தற்போது வாழைக்கு சீசன் இல்லாத காலம். கிலோ 24 ரூபாய் விற்ற ரோபஸ்டா ரக பச்சை வாழை தற்போது ஒரு கிலோ 12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிலோ 70 ரூபாய் வரை விற்பனையான நாளிப்பூவன் தற்போது 28 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கற்பூர வள்ளி ஒரு தார் விலையே 150 ரூபாயாக குறைந்து விட்டது. செவ்வாழை ஒரு கிலோ 58 ரூபாயில் இருந்து 40 ரூபாயாக குறைந்துள்ளது. தை மாதத்திற்கு மேல் மீண்டும் இவற்றின் விலைகள் அதிகரிக்க தொடங்கும். தொடர்ச்சியாக வைகாசி மாதம் வரை விலை கிடைக்கும். சபரிசலை சீசன் மும்முரமாக உள்ளதால், கேரளாவில் சிப்ஸ் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடக்கிறது.

சிப்ஸ் விற்பனையும் களைகட்டி உள்ளது. இதனால் சிப்ஸ் தயாரிக்க உகந்த நாட்டுரக சக்கை எனப்படும் வாழைக்காய்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதனால் ஒரு கிலோ 26 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முன்பு விவசாயிகளிடம் ஒரு கிலோ 5 ரூபாய்க்கு வாங்கி 12 ரூபாய்க்கு நாங்கள் விற்போம். தற்போது கிலோ விவசாயிகளிடம் 12 ரூபாய்க்கு வாங்கி, வெட்டுகூலி, சுமைக்கூலி, வண்டி வாடகை, லாபம், கமிஷன் எல்லாம் சேர்த்து 26 ரூபாய்க்கு விற்கிறோம். விவசாயிகளுக்கு 12 ரூபாய் கிடைப்பதே நல்ல விலை தான். இவ்வாறு கூறினார்.

Tags : Banana Farmers ,Sabarimala Season ,Welcome to Country Banana Chips Banana Farmers for Jackpot , Jackpot,Banana Farmers, Sabarimala Season, Country Banana
× RELATED சபரிமலை சீசன் தொடக்கம்...