×

ஈரோட்டில் போக்குவரத்து விதிமுறைகளை கற்பிக்க டிராபிக் பார்க்: கட்டுமான பணி தீவிரம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி பருவத்தில் இருந்தே  போக்குவரத்து விதிமுறைகளை கற்பிக்க டிராபிக் பார்க் கட்டுமான பணி கடந்த 6  மாதத்திற்கு முன்பு துவங்கப்பட்டது. தற்போது, பணிகள் 85 சதவீதம்  நிறைவடைந்துள்ளது. விரைவில் திறப்பு விழா செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வர  உள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து  அதிகரித்து வருகிறது. இதில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன  ஓட்டிகளால் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்பு சம்பவமும் அதிகரித்து  வருகிறது. சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மாவட்ட காவல் துறை  சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில், ஒரு  பகுதியாக சாலை பாதுகாப்பினை மேம்படுத்தவும், போக்குவரத்து விதிமுறைகளை  குறித்து பள்ளி பருவத்தில் இருந்தே மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்துவதற்காக ஈரோடு மோளகவுண்டம்பாளையத்தில் மாவட்ட காவல்துறையின்  அறிவுறுத்தலின்படி, மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்,  ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் டிராபிக் பார்க் கட்டுமான  பணி கடந்த 6 மாதத்திற்கு முன்பு துவங்கப்பட்டது.  

இந்த டிராபிக் பார்க்கில், டிஜிட்டல் திரை கொண்ட வகுப்பறை, நெடுஞ்சாலைகள்,  சர்வீஸ் ரோடு சந்திப்புகள் என நிஜ வாழ்க்கையில் நாம் சந்திப்பது போலவே  மாதிரி சாலைகள் அமைக்கப்படுகிறது. அதில், மத வழிபாட்டு தலம்,  பள்ளிப்பகுதிகள், குறுகலான சாலை மற்றும் அப்பகுதியில் வாகன ஓட்டிகளை  எச்சரிக்கை ஏற்படுத்தும் விதமாக போக்குவரத்து சமிக்ஞைகள், குறியீடுகள்  போன்றவை அமைக்கப்படுகிறது. மாநகராட்சி சார்பில் நடந்து வரும் இப்பணிகள்  தற்போது 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் திறப்பு விழா  செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு வர உள்ளது.

  இது குறித்து ஈரோடு எஸ்பி.  சக்திகணேசன் கூறியதாவது: ஈரோடு - கரூர் ரோடு மோளகவுண்டம்பாளையத்தில்  அமைக்கப்படும் டிராபிக் பார்க்கில் வகுப்பறைகள், போக்குவரத்து விதிமுறை  விழிப்புணர்வு வாசகங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மாதிரி  சாலைகள் மட்டும் தான் அமைக்க வேண்டும். 85 சதவீதம் பணிகள் நிறைவு பெற்று  விட்டது. இந்த மாதம் அல்லது பிப்ரவரி மாத இறுதிக்குள் திறப்பு விழா  செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு வர உள்ளது. திறப்பு விழா முடிந்ததும், ஈரோடு  கலெக்டர் அனுமதியின் பேரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு  சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு காலை, மாலை  நேரங்களில் டிராபிக் பார்கில் வகுப்புகள் நடத்தப்படும். இதில் சாலை  விதிமுறைகளை வகுப்பறையிலும், அதனை எப்படி பின்பற்ற வேண்டும் என மாதிரி  சாலைகளிலும் நேரடியாக காண்பித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு  எஸ்பி. சக்திகணேசன் கூறினார்.

Tags : Tropic Park , Tropic Park, teach traffic, Erode,Construction work intensity
× RELATED ஈரோட்டில் போக்குவரத்து விதிமுறைகளை...