×

தலையாட்டிமந்து முதல் ஆவின் வரை இருபுறமும் வாகனம் நிறுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம்

ஊட்டி: ஊட்டி - குன்னூர் சாலையில் தலையாட்டிமந்து முதல் ஆவின் வரை சாலையின் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஊட்டியில் - குன்னூர் நெடுஞ்சாலையில் தலையாட்டிமந்து பகுதி உள்ளது. இந்த நெடுஞ்சாலை நீலகிரி மாவட்டத்தை மற்ற சமவெளி பகுதி மாவட்டங்களை இணைப்பதால் இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.இதனால் இந்த சாலை எப்போழுதும் வாகனங்களால் பிஸியாக காணப்படும். இந்த சாலையில் எப்போதும் ஈரம் இருந்து கொண்டிப்பதால் சாலை எத்தனை முறை அமைத்தாலும் சேதமடைந்து வந்தது. இதை கருத்தில் கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தலையாட்டிமந்து பகுதியில் இருந்து ஆவின் பகுதி வரை இன்டர்லாக் கற்கள் கொண்டு சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலை அகலமானது. இந்த சாலையில் இடையூறின்றி வாகனங்கள் சென்று வந்தன.

 தற்போது இந்த சாலையில் இரு புறமும் ஆங்காங்கே ஆட்டோ, கார், ஜீப், லாரி போன்ற கனரக வாகனங்களை நிறுத்தி விடுவதால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன ஒட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.இதனால் அடிக்கடி கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது மட்டுமில்லாமல் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் நடக்கிறது. எனவே தலையாட்டிமந்து பகுதியில் இருந்து ஆவின் பகுதி வரை சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,accident ,Avi , Driving, both sides, road ,Thalaiadamundu, Avi ,risk of an accident
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி