×

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: அஜித் பவாருக்கு நிதித்துறை

மும்பை: மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ‘மகாராஷ்டிரா விகாஸ் அகாடி’ என்ற கூட்டணியை அமைத்து மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த நவம்பர் 28ம் தேதி முதல்வராக பதவியேற்றார் அன்றைய தினம் மூன்று கட்சிகளையும் சேர்ந்த தலா 3 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

அதன்பிறகு ஒரு மாத காலத்துக்கு பின்னர் டிசம்பர் 30ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. நீண்ட தாமதத்தக்கு பிறகு செய்யப்பட்ட இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின்போது 3 கட்சிகளையும் சேர்ந்த 36 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அனில் தேஷ்முக் உள்துறை அமைச்சராகி இருக்கிறார். முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனும் சிவசேனா இளைஞரணி தலைவருமான ஆதித்யா தாக்கரேக்கு சுற்றுச்சூழல், சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மூத்த காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரத்துக்கு வருவாய்த்துறையும் அவருடைய கட்சி சகாவும் முன்னாள் முதல்வருமான அசோக் சவானுக்கு பொதுப்பணித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவருமான தனஞ்சய் முண்டேக்கு சமூக நீதித்துறையும் கட்சியின் மற்றொரு தலைவர் ஜிதேந்திர ஆவாத்துக்கு வீட்டுவசதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குத்தான் பல முக்கிய இலாகாக்கள் கிடைத்துள்ளன. தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார் அல்லது ஜெயந்த் பாட்டீலுக்கு உள்துறை அமைச்சகம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த கட்சியை சேர்ந்த நாக்பூர் மாவட்டம் கதோல் தொகுதி எம்.எல்.ஏ. அனில் தேஷ்முக்கிற்கு இந்த இலாகா வழங்கப்பட்டிருக்கிறது.


Tags : ministers ,state ,Maharashtra ,Ajit Pawar Ministers for Portfolio Allocation ,Ajit Pawar , State of Maharashtra, Minister, Portfolio, Allocation, Ajit Pawar, Finance Department
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...