×

நாட்டிலேயே முதல் மாநிலமாக குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த உபி அரசு உத்தரவு: கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை

பாட்னா: நாட்டிலேயே முதல் மாநிலமாக, குடியுரிமை திருத்த சட்டத்தை தனது மாநிலத்தில் அமல்படுத்துவதற்கான உத்தரவை உபி அரசு பிறப்பித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி, சட்டப்பேரவையில் கேரள அரசு சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றி இருக்கிறது. இச்சட்டத்தை எதிர்த்து மிக அதிகப்பட்சமாக உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில்தான் வன்முறைகள் நடந்தன. அதில், 19 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக, குடியுரிமை திருத்த சட்டத்தை தனது மாநிலத்தில் அமல்படுத்த உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து உத்தரப் பிரதேசத்தில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், புத்தமதத்தினர், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் அடையாளம் கண்டு குடியுரிமை பெறுவதற்கு தகுதியானவர்களை பட்டியலிடும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை, இம்மாநில கூடுதல் தலைமை செயலாளர் அவானிஸ் அவஸ்தி நேற்று கூறினார். அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘லக்னோ, ஹபூர், ராம்பூர், ஷாஜகான்பூர், நொய்டா, காசியாபாத் ஆகிய இடங்களில் பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் அதிகளவில் குடியேறியுள்ளனர். இவர்களின் பட்டியல் தயார் செய்யப்படுவது இதுவே முதல்முறை. மேலும், மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறிய முஸ்லிம்கள் பற்றிய விவரமும் சேகரிக்கப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்படும்,’’ என்றார்.

* மக்கள்தொகை பதிவேடு பணி பீகாரில் மே 15-ல் துவங்குகிறது
தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை அமல்படுத்த முடியாது என கேரளா, மேற்குவங்க அரசுகள் அறிவித்துள்ளன. இதை அமல்படுத்துவது பற்றி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால், பாஜ.வை சேர்ந்த இம்மாநில துணை முதல்வரான சுசில் குமார் மோடி நேற்று அளித்த பேட்டியில், ‘‘தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணி பீகாரில் மே 15ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடத்தப்படும்,’’ என்று அறிவித்தார். சிறையில் இருக்கும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் ஜாதி பெயரும் சேர்க்கப்பட வேண்டும்,’ என வலியுறுத்தி உள்ளார்.

Tags : government ,Uppi ,state ,country , First State, Citizenship Amendment Satm, Ubi Government, Lector, Circular
× RELATED தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில்...