×

பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈராக் வந்த ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை (62) டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டரில் விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரான் எங்களை தாக்கியது. நாங்கள் திருப்பி தாக்கினோம். அமெரிக்கரை கொன்று, அமெரிக்க வீரர்களை காயப்படுத்திய தீவிரவாத தலைவரை நாங்கள் கொன்றோம். அவர் தனது வாழ்நாளில் கொன்றவர்களை எல்லாம் நாங்கள் குறிப்பிடவில்லை. ஈரானில் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானோரை அவர் சமீபத்தில் கொன்றார். அமெரிக்க தூதரகத்தை தாக்கினர். இன்னும் பல அமெரிக்க இலக்குகளை தாக்க அவர் திட்டம் தீட்டினார்.  

சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் ஈரான் மீண்டும் தாக்கினால், நாங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மிக கடுமையான தாக்குதல் நடத்துவோம். அதனால், தாக்குதல் நடவடிக்கையில் ஈரான் இறங்க வேண்டாம் என அறிவுரை கூறுகிறேன். உலகிலேயே நாங்கள் பெரிய மற்றும் சிறந்த ராணுவம். அமெரிக்க ராணுவ முகாம் அல்லது எந்த அமெரிக்கரையாவது ஈரான் தாக்கினால், எங்களின் அழகான புதிய பிராண்ட் ஆயுதங்களை தயங்கமின்றி பயன்படுத்துவோம். இவ்வாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். கடந்த 10 மணி நேரத்தில் ஈரானுக்கு 2வது முறையாக அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* 52 இடங்களை தாக்குவோம்
டிரம்ப் வெளியிட்டுள்ள மற்றொரு டிவிட் தகவலில், ‘அமெரிக்க மக்கள் அல்லது சொத்துக்கள் மீது ஈரான் தாக்கினால், ஈரானில் 52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம். ஈரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் கடந்த 1979ம் ஆண்டிலிருந்து 52 பேர் ஓராண்டுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டிருந்தனர். அந்த எண்ணிக்கைதான் இது. அவ்வளவும் ஈரானின் மிக முக்கியமான இலக்குகள். இந்த இடங்களை நாங்கள் விரைவாக, மிக கடுமையாக தாக்குவோம். இனி எந்த அச்சுறுத்தலையும் அமெரிக்கா விரும்பவில்லை’’ என குறிப்பிட்டுள்ளார்.

* அமெரிக்க முகாம் மீது ராக்கெட் தாக்குதல்
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம், ராணுவ முகாம் உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 3 இடங்களில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் ஆதரவு போராளிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். அதனால், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள், பயிற்சி அளிக்கும் பணியை நிறுத்தி விட்டு, தாக்குதலை எதிர்கொள்ளும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

* ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சு
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவேத் ஜாரிப்புடன் நேற்று போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் பதற்றம் பற்றி இந்தியாவின் சார்பில் கவலை தெரிவித்தார். இதற்கிடையே, ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதர் மேத்யூ டுல்லருக்கு ஈராக் வெளியுறவு அமைச்சகம் நேற்று சம்மன் அனுப்பி அழைத்து, அத்துமீறி தாக்குதல் நடத்தியது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

* சுலைமானி உடலை பார்க்க திரண்ட மக்கள்
ஈராக்கில் அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி சுலைமானியின் உடல், நேற்று காலை ஈரான் கொண்டு செல்லப்பட்டது. ஆவாஸ் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருடைய உடல், மஸ்கத் என்ற இடத்துக்கு நேற்று மதியம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் கருப்பு உடை அணிந்து அழுதபடி, நெஞ்சில் அடித்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். ‘அமெரிக்காவுக்கு மரணம்’ என கோஷமிட்டனர். சுலைமானியின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது.

* அமெரிக்க படை வெளியேற தீர்மானம்
ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றதால், தனது நாட்டில் இருந்து அந்நாட்டு ராணுவத்தை வெளியேற்றுவது குறித்து ஈராக் நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் நடந்தது. இதையடுத்து, ஈராக்கில் உள்ள 5,000 ராணுவ வீரர்களை அமெரிக்கா வாபஸ் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க கடந்த 4 ஆண்டுக்கு முன்பு அமெரிக்க ராணுவத்தின் உதவியை ஈராக் கேட்டு வாங்கியது.

Tags : Trump ,Iran ,attack , Revenge, action, Iran, attack, President Trump, warning
× RELATED தேர்தலில் தோற்றால் ரத்தகளறி ஏற்படும்:...