×

தென் ஆப்ரிக்கா 223 ரன்னில் ஆல் அவுட்

கேப்டவுன்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 223 ரன்னுக்கு சுருண்டது. நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன் எடுத்திருந்தது. போப் 56 ரன், ஆண்டர்சன் 3 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆண்டர்சன் 4 ரன்னில் வெளியேற, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 269 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (91.5 ஓவர்). போப் 61 ரன்னுடன் (144 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ரபாடா 3, பிலேண்டர், நோர்ட்ஜே, பிரிடோரியஸ் தலா 2, மகராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து வீரர்களின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் துடிப்பான பீல்டிங்கை சமாளித்து ரன் குவிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 89 ஓவரில் 223 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. தொடக்க வீரர் டீன் எல்கர் 88 ரன் (180 பந்து, 10 பவுண்டரி), வான் டேர் டஸன் 68 ரன் (187 பந்து, 7 பவுண்டரி), டி காக் 20, பிலேண்டர் 17* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன் 19 ஓவரில் 6 மெய்டன் உட்பட 40 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். ஸ்டூவர்ட் பிராடு, சாம் கரன் தலா 2, டொமினிக் பெஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 46 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன் எடுத்துள்ளது. கிராவ்லி 25, டென்லி 31 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் ஜோ ரூட் 61 ரன்னுடன் ஆட்ட மிழந்தார். பெஸ் டக் அவுட் ஆனார். டோம் சிப்லி 85 ரன்னுடன் களத்தில் உள்ளார். கை வசம் 6 விக்கெட் இருக்க, இங்கிலாந்து 264 ரன் முன்னிலை பெற்றுள்ளது

Tags : South Africa , South Africa, 223 run, all out
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...