×

குப்பை கொட்டுவதை தடுக்க சாலையில் கோலம் வரைந்த மாநகராட்சி ஊழியர்கள்

பெரம்பூர்: சாலையில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநகராட்சி ஊழியர்கள் கோலம் வரைந்தனர். சென்னை திரு.வி.க. நகர் 6வது மண்டலத்துக்கு உட்பட்ட 73வது வார்டு ஓட்டேரி நியூ பேரன்ஸ் சாலையில் ஆங்காங்கே குப்பை கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். எனவே, சாலையில் குப்பையை கொட்ட கூடாது என அப்பகுதி மக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சாலையில் குப்பை கொட்டப்படுவது குறைந்தபாடில்லை.

இந்நிலையில், சாலையில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மண்டல அதிகாரி நாராயணன் தலைமையில் உதவி பொறியாளர் குமரவேல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கண்ட பகுதிக்கு நேற்று முன்தினம் காலை வந்தனர். அவர்கள் வீடு, வீடாக சென்று, ‘தினமும் காலையில் மாநகராட்சி ஊழியர்கள் வந்து குப்பையை பெற்றுக்கொள்வார்கள். இவ்வாறு பெறப்படும் குப்பை 10 நாட்களுக்கு ஒருமுறை உங்களுக்கு உரமாக வழங்கப்படும். நமது பகுதியை நாம்தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இனிமேல், வீதிகளில் குப்பை கொட்ட வேண்டாம்’’ என்று கேட்டுக்கொண்டனர். இதன்பிறகு குப்பை கொட்டப்படும் இடங்களை சுத்தம் செய்து வண்ண கோலங்களை வரைந்தனர். அதில், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், குப்பையை தரம் பிரித்து கொடுப்போம், குப்பையில்லா மாநகராட்சியை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

Tags : Corporation employees ,road , Garbage, Road, Colum, Drawing, Corporation, Staff
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி