×

டாப் 100ல் 40 பேர் ராமேஸ்வரம், கீழக்கரை மையத்தில் எழுதியவர்கள் குரூப் 4 தேர்வில் மெகா முறைகேடு: டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளும் உடந்தை? விசாரணைக்கு கல்வியாளர்கள் வலியுறுத்தல்

ராமேஸ்வரம்: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களின் தரவரிசை பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் வந்தவர்கள் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்று தெரிய வந்துள்ள நிலையில், தேர்வில்  முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவையர், தட்டச்சர் போன்ற பணிகளுக்காக குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு செப். 1ம் தேதி நடந்தது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும்  5,575 மையங்களில் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் எழுதினர். நவ. 25ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி அடைந்தவர்களின் தரவரிசைப்பட்டியல் வெளியானது.

இதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 40 பேர் முதல் நூறு இடங்களுக்குள் வந்துள்ளனர். குறிப்பிட்ட மையங்களில் மட்டும் தேர்வு எழுதிய இவர்கள் அனைவரும் வெளிமாவட்டங்களை  சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இதன் மூலம் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் உள்ளூரை சேர்ந்த பலரும் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் தேர்வு பெற்றவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. குறிப்பிட்ட 40 பேரும் வெளிமாவட்டங்களை  சேர்ந்தவர்கள். இவர்கள் தேர்வெழுத, அந்தந்த பகுதியிலேயே தேர்வு மையங்களும் இருக்கின்றன. ஆனால் இதனைத் தவிர்த்து பல மணிநேரம் பயணம் செய்து ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களை தேர்வு செய்து இங்கு வந்து எழுதியது  மிகப்பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மாநில அளவில் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நபர் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியுள்ளார். முதலிடத்திற்கு தேர்வாகும் நிலையில் உள்ளவர் சிவகங்கையை தவிர்த்து ஏன் பல  மணிநேரம் பயணித்து ராமேஸ்வரம் வந்து தேர்வு எழுதினார் என்று கேள்வி எழுந்திருக்கிறது. இதுபோன்ற சந்தேகங்கள் 40 பேர் மீதும் எழுந்துள்ள நிலையில் தரவரிசைப் பட்டியலை சரிபார்த்தபின் இதுகுறித்து விளக்கம் தெரிவிக்கப்படும் என  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வு மையத்தில் பணியாற்றிய அனுபவமிக்க சிலரிடம் கேட்டபோது, ‘‘தேர்வு மையங்களில் வழங்கப்படும் ஓஎம்ஆர் விடைத்தாள்கள் தேர்வு எழுதுபவர்களால் முழுமையாக நிரப்பப்படாமல் கவரில் வைத்து ஒட்டி கொடுக்கப்படும்.  

குறிப்பிட்ட தேர்வு மையங்களில் இருந்து செல்லும் குறிப்பிட்ட நபர்களின் விடைத்தாள் கவர்கள் மட்டும் மீண்டும் பிரிக்கப்பட்டு ஓஎம்ஆர் விடைத்தாள்கள் முழுமையாக நிரப்பப்பட்டு, மீண்டும் கவர்கள் ஒட்டப்பட்டு வைக்கப்பட்டு விடும்.  விடைத்தாள் கவர்கள் மதிப்பீடு செய்யப்படும்போது குறிப்பிட்ட கவருக்கு சொந்தமான நபர்கள் அதிக மதிப்பெண் பெற்று தரவரிசை பட்டியலில் முன்னிலை பெறுவதற்காக வாய்ப்பு தானாக உருவாகிவிடும். இதனை ஒன்றுக்கும் மேற்பட்ட  நபர்களால் மட்டுமே திட்டமிட்டு செயல்படுத்த முடியும். தேர்வாணையத்தில் பணியாற்றுவோரின் பங்கு இதில் நிச்சயம் இருக்கும்’’ என்று தெரிவித்தனர்.தேர்வு எழுதிய லட்சக்கணக்கானவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் சர்ச்சையை கிளப்பியுள்ள இப்பிரச்னை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு விரிவான விசாரணை மேற்கொள்ளவேண்டும் என  கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Top 100 Rameshwaram ,academics ,Down Under Center Written by Group 4 Examination Emphasizing , 40 of the Top 100 Rameshwaram, Down Under Center Written by Group 4 Examination Emphasizing academics for inquiry
× RELATED புதுபுது புத்தகங்களை வாங்கி வைத்து...