×

ஒரு பைசா கட்டண உயர்வை பெரிதாக பேசுவதா?: சிபி.ராதாகிருஷ்ணன், பாஜ மூத்த தலைவர்

ரயில்வே கட்டணம் 1 பைசா உயர்ந்ததற்கு எதற்கு எதிர்க்கட்சிகள் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் என்று தெரியவில்லை. ரயில்வே நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறது. ரயில் பெட்டிகள் சுத்தமடைந்து வருகிறது. எங்கு  பார்த்தாலும் குப்பை கூடாரமாக காட்சியளித்த ரயில் நிலையங்கள் இப்போது சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. புதுவிதமான ரயில் பெட்டிகள் வந்து கொண்டே இருக்கிறது. பல காலங்களாக மாற்றப்படாமல் பயன்படுத்தப்பட்ட பெட்டிகள், தரம்  குறைந்த பெட்டிகள் மாற்றப்பட வேண்டியுள்ளது. எனவே, ரயிலை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கும் போது, ஒரு பைசா உயர்வு என்பது ஒன்றுமே இல்லை.

 வெங்காயத்தை பொறுத்தவரையில் அந்த விலை உயர்வுக்கு பிரதமர் மோடி தான் காரணம் என்று கூறுபவர்கள் கூட 3 மாதங்களுக்கு முன்பு ரூ.100க்கு 6 கிலோ, 7 கிலோ என்று விற்று கொண்டிருந்த போது மோடியை பாராட்டியதாக  தெரியவில்லை. ஏதாவது ஒரு உணவு பொருள் விலை உயர்வு என்பது சாதாரணமான நடைமுறை தான். அந்த ஒரு உணவு பொருள் கூட விலை உயர்ந்து விற்கவில்லை என்றால் விவசாய தொழிலை மட்டும் நம்பி இருக்கிற குடும்பங்கள்  விவசாய தொழிலை கைவிட வேண்டிய நிலை வந்து விடும்.
 அவ்வப்போது 2 ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இது போன்று ஒரு பொருள் விலையேறி, இறங்குவது என்பது நடைமுறையில் இருந்து கொண்டு தான் உள்ளது. அதுவும் தாறுமாறாக உயர்ந்தவுடனேயே எகிப்தில் இருந்து  வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஹாலந்தில் இருந்து இறக்குமதி ஆகிறது. துருக்கியில் இருந்து இறக்குமதி ஆகிறது.

 இன்றைக்கு வெங்காயம் விலையேற்றம் கட்டுபடுத்தப்பட்டது மட்டுமின்றி கடந்த மாதத்தை விற்றதை விட தற்போது  1 கிலோ வெங்காயம் ₹40க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வதாராம் பாதிக்காமல், எப்படி இந்திய தேசத்தின் பொருளாதாரத்தை எடுத்து செல்வது என்பதற்கு மோடிக்கு நிகரான  தலைவர் இல்லை என்பது தான் கடந்த 6 ஆண்டுகால மோடி ஆட்சி உணர்த்துகிறது. விலைவாசி உயராத இந்த 6 ஆண்டுகாலம் எதிர்க்கட்சிகள் வெறுத்துப்போய் இருக்கிறார்கள். அதனால், தான் வெங்காய விலை பற்றியும், 1 பைசா ரயில்  கட்டண  உயர்வு பற்றியும் பெரிய அளவில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

 சமையல் காஸ் சிலிண்டரைப் பொறுத்தவரையில் மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் விலை தான் உயர்ந்து கொண்டிருக்கிறது. மானியத்துக்குட்பட்ட விலை உயரவில்லை. மானியத்துக்கு உட்படுத்தாதவர்கள் வறுமை கோட்டிற்கு மேல்  உள்ளவர்கள். அவர்களின் வாங்கும் சக்தி அதிகம். அதற்காக ஒரு நிலையும், மானியத்தோடு கூடிய காஸ் சிலிண்டர் என்பது ஏழை எளிய மக்கள் பயன்படுத்துகிற காஸ் சிலிண்டர் என்பதால் அதற்கு ஒரு விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  யாரால் அதிக விலை தர முடியுமோ அவர்களுக்கான ஒரு ஏற்பாடு தான் இது. சந்தை விலை உயரும் போது அந்த சிலிண்டர் விலை உயரும். சந்தை விலை குறையும் போது அந்த சிலிண்டர் விலை குறைவதுமாக இருக்கிறது.

 பொருளாதாரத்தின் அடிப்படையை புரிந்து கொண்டவர்கள் அதன் அரிச்சுவடியை புரிந்து கொண்டவர்களுக்கு இது, எளிதாக புரியும். ஒன்றுமே கிடைக்கவில்லையே, ஏதாவது மோடியை குறை சொல்லி கொண்டே இருந்தால் நாட்டின்  முன்னேற்றத்தை தடுத்து விட முடியும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் வசைபாடுவதை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்றம் மிகுந்த இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரிய எழுச்சியை விரைவில் காண உள்ளது. 5வது  பொருளாதார சக்தியாக உயர்ந்துள்ள இந்திய தேசம் விரைவில், உலகத்தில் பொருளாதாரத்தை உச்சத்தை தொடுகிற நாடாக இந்தியா இருக்கும்.

Tags : CP Radhakrishnan ,BJP ,penny fee hike , Speaking of a penny fee hike: CP Radhakrishnan, senior BJP leader
× RELATED தெலங்கானா பொறுப்பு ஆளுநராக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்