×

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அருகே பக்தர்கள் ஓய்வு கூடத்தை சுற்றிலும் கழிவுநீர் தேக்கம்: தொற்றுநோய் பரவும் அபாயம்

சென்னை: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அருகே உள்ள பக்தர்கள் ஓய்வு கூடத்தை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அருகில் உள்ள நூலகத்துக்கு வரும் வாசகர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். திருப்போரூரில் இருந்து நெம்மேலி செல்லும் சாலையில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த சாலையின் மற்றொரு திசையில் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதி, திருமண மண்டபம், ஓய்வுக்கூடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது.

இவற்றை ஒட்டி திருப்போரூர் கிழக்கு மாடவீதி, திருவஞ்சாவடி தெரு ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்கிறது. ஒரு காலத்தில் மழைநீர் வடிகால்வாயாக இருந்த இந்த கால்வாய் தற்போது சாக்கடை கழிவுநீர் வெளியேறும் கால்வாயாக மாறிவிட்டது. இந்நிலையில் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் சார்பில் திருமண மண்டபம் கட்டப்படும்போது செப்டிக் டேங்க் கட்டுவதற்காக மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அவற்றில் ஒரு பகுதி மட்டும் தொட்டி கட்டப்பட்டது. மீதி உள்ள பள்ளத்தில் பல்வேறு தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது.

இதனால் இவற்றில் கொசு உற்பத்தியாகி கிழக்கு மாடவீதி, திருவஞ்சாவடி தெரு, சன்னதி தெரு, சுப்பராயலு நகர் ஆகிய இடங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு தொற்று நோயை உருவாக்குகிறது. திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாமல் அவ்வப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் தேங்கியுள்ள கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. பின்னர் சில நாட்களில் மீண்டும் இந்த பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி விடுகிறது. இதனால் நூலகத்திற்கு வருபவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு கொசுக்கடியுடன் புத்தக வாசிப்பில் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது. ஆகவே, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் நெம்மேலி சாலையில் நூலகம் எதிரே தேங்கியுள்ள இந்த கழிவுநீரை அகற்ற நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pilgrims ,Tirupporeur Kandaswamy Temple ,temple ,rest pilgrims ,Tirupporeur Kandaswamy , Thirupporeur, Kandaswamy temple, pilgrims rest, sewage stagnation, infection, danger
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்