×

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மூலம் ஊரக பகுதிகளிலும் திமுக கொடிகட்டி பறக்கிறது: கலைஞர் சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஊரக பகுதிகளிலும் திமுக கொடிகட்டி பறக்கிறது என்பதை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மெய்ப்பித்திருக்கின்றன என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞரின் மார்பளவு வெண்கல சிலை திறப்பு விழா, சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள இளம்பெண்களுக்கு இலவச பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்கிடும் கலைஞர் கணினி  கல்வியகம் தொடக்க விழா சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது. விழாவுக்கு சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.  

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கலைஞர் சிலை மற்றும் கணினி கல்வியகத்தை தொடங்கி வைத்தார். விழாவில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், எம்எல்ஏக்கள் பொன்முடி, பி.கே.சேகர்  பாபு, எஸ்.அரவிந்த் ரமேஷ், வாகை சந்திரசேகர், கே.கே.நகர் தனசேகரன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், திமுக பகுதி செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்,  தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கலைஞரின் சிலையை நாம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து, திறந்து வைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில், சைதை தொகுதியில் கலைஞரின் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது கலைஞருக்கு எவ்வளவு பிடித்தமான தொகுதி  என்பது உங்களுக்கு தெரியும். அண்ணா 67ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது விருகம்பாக்கம் மாநாட்டில், திமுகவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்கும் நேரத்தில், ஒவ்வொரு தொகுதியாக சொல்லி யார் யார் நம்முடைய வேட்பாளர்கள் என அறிவித்தார்.  இறுதியாக சைதாப்பேட்டை என்று சொல்லி, வேட்பாளர் பெயரைச் சொல்லாமல், சைதாப்பேட்டையில் 11 லட்சம் போட்டியிடுகிறது என்று அறிவித்தது, நம் இயக்கத்தின் வரலாறு. கலைஞர் அவர்களின் வரலாறு. 1967ல் வெற்றி பெற்ற பிறகுதான்,  நாம் ஆட்சிக்கே வந்தோம். அண்ணா முதலமைச்சராக வந்தார். கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

அண்ணா மறைவுக்குப் பிறகு 71ம் ஆண்டு மீண்டும் தேர்தலைச் சந்தித்தோம். மீண்டும் கலைஞர் தேர்ந்தெடுத்த தொகுதி இதே சைதை தொகுதிதான். சைதாப்பேட்டை என்பது கலைஞருடைய பேட்டை; சைதாப்பேட்டை என்பது திமுகவின்  பேட்டை.
நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கொளத்தூர் தொகுதியில் மாணவி அனிதா பெயரில், பயிற்சி மையம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதில் முதற்கட்டமாக 67 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியை முடித்து வேலைக்கு போய்க்  கொண்டிருக்கிறார்கள். 2வது கட்டமாக 61 பேர் பயிற்சி முடித்து வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இதை கொளத்தூர் தொகுதியில் மட்டும் நடத்தி நான் பெருமைப்பட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இது தமிழ்நாடு முழுமைக்கும்  நடைபெற வேண்டும்.

 நம்முடைய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பணியில் ஈடுபட வேண்டும். ஏற்கனவே மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்திருக்கிறார். ஏன் என்றால் இன்றைக்கு இளைஞர்கள், குறிப்பாக  படித்த பட்டதாரிகள், வேலையில்லாமல் அலைந்து கொண்டிருக்கும் கொடுமைகளைப் பார்த்து, உள்ளபடியே வேதனைப்படுகிறோம். ஆகவே அந்தத் துயரங்களை ஓரளவேனும் குறைக்கும் வகையில் ஈடுபடவேண்டும் என்று நான்  கேட்டுக்கொள்கிறேன்.
2 நாட்களாக ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல். உள்ளாட்சியிலே நல்லாட்சி தந்தவர்கள் நாம் என்பதை மறந்திருக்க மாட்டீர்கள். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை யார் ஆட்சியில் இருக்கிறார்களோ, அவர்கள் தான்  அதிக இடங்களில் வெற்றி பெறுவது என்பது மரபு வழியாக வந்து கொண்டிருக்கிறது. அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபொழுது, ஊரக பகுதிகளில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக அதிக இடங்களை  கைப்பற்றியது. ஆனால் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் அதிக இடங்களைப் பெற்ற கட்சி திமுக. அது வரலாறு. அதுவும் இப்போது மாற்றப்பட்டு நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி பகுதி மட்டும் அல்ல, ஊரகப் பகுதிகளிலும் திமுக இன்றைக்கு  கொடி கட்டிப் பறக்கிறது என்பதை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறோம். எனக்கு என்ன வேதனை என்றால், இந்த ஊடகங்கள், இப்போதும் என்ன செய்தி போடுகிறார்கள் என்றால், அதிமுகவும், திமுகவும் சரிசமமாக வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று செய்தி வெளியிடுகிறார்கள். என்ன சரிசமம்? உள்ளாட்சித்  தேர்தலில் ஊரக, கிராம பகுதிகளில் ஆளுங்கட்சியான அதிமுகவை விட நாம் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.

சில அமைச்சர்கள் பேட்டி கொடுக்கிறார்கள். முந்திரிக் கொட்டை அமைச்சர் ஒருவர் இருக்கிறார்.  அவர்கள் வளர்பிறையாம். நாம் தேய்பிறையாம். எது வளர்பிறை? எது தேய்பிறை. இந்த சராசரி அறிவுகூட ஓர் அமைச்சருக்கு இல்லை. 2020  என்றார்களே, 2021 வரும் போது பாருங்கள் எப்படி நடக்குது என்று. ஒன்றிய கவுன்சிலர்களை பொறுத்தவரை திமுக வெற்றி பெற்றிருக்கும் இடங்கள் 2,100. அதிமுக 1,781. எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தோற்றவர்களைத்தான் ஜெயிக்க வைத்தார்கள். ஜெயித்தவர்களை  தோற்கடித்துள்ளார்கள். இவ்வளவு அக்கிரமங்கள் நடந்த பிறகு நாம் 2,100 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.

ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ள இடங்கள் 1,781. வித்தியாசம் எவ்வளவு? 319 இடங்களை திமுக அதிகம் பெற்றுள்ளது. இது  சரிசமமா? மாவட்ட கவுன்சிலர்களைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 243 இடங்களைப் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது 214 இடங்கள். வித்தியாசம் 29. எது அதிகம்? எது வளர்பிறை, எது தேய்பிறை? என  முந்திரிக்கொட்டை அமைச்சரைக் கேட்கிறேன். அவரைப் பற்றி வருத்தப்படவில்லை. அரசியலுக்காக அப்படிச் சொல்லியாக வேண்டும். ஆனால் ஊடகத்திற்கும், பத்திரிகை துறைக்கும் என்ன வந்தது? உண்மையை வெளிப்படையாக எழுத  வேண்டியதுதானே? எழுதக் கூடிய காலம் விரைவில் வரும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : areas ,DMK ,speech ,MK Stalin ,inauguration ,opening , DMK flag flies in rural areas by local election results: MK Stalin's speech at the opening of the statue
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி