×

விற்பனையை விட செலவு அதிகமானதால் அம்மா உணவகங்களுக்கு ரூ.483 கோடி இழப்பு: மானிய விலை அரிசி, கோதுமை வழங்குவது ஓராண்டு நீட்டிப்பு...தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள விற்பனையை விட செலவு அதிகமானதால் அம்மா உணவகங்களுக்கு கடந்த 6 ஆண்டுகளில் ₹ 483 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மானிய விலையில் அரிசி, கோதுமை  வழங்குவதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசாணையில் கூறியிருப்பதாவது :   அம்மா உணவகங்களுக்கு மாதம் ஒன்றுக்கு மானிய விலையில் 350 டன் கோதுமை மற்றும் 740 டன் அரிசி வழங்கப்படுகிறது. இதன்படி அரிசி கிலோ ₹1 க்கும், கோதுமை கிலோ ₹17.25க்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம்  வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கூட்டுறவுத் துறையின் முதன்மை செயலாளர் சென்னை மாநகராட்சிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கான பொருளாதார விலை அடிப்படையில் வித்தியாச தொகை அரசிடம் இருந்து  பெற வேண்டும் என்று பொது கணக்கு தணிக்கை  துறையினர் தணிக்கை தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் 30.6.2017 வரை அம்மா உணவகங்களுக்கு வழங்கப்பட்ட அரிசிக்கான வெளிசந்தை பொருளாதார விலை ₹46 கோடியே 10 லட்சத்து  69 ஆயிரத்தில் சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட ₹2 கோடியே 9 லட்சத்து 16 ஆயிரத்து 545 போக மீதமுள்ள வித்தியாச தொகையான 44 கோடியே 1 லட்சத்து 79 ஆயிரத்து 490 ஐ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கணக்கில்  செலுத்துவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆணையரை கேட்டுக் கொண்டார்.

19.2.2013 முதல் 2018-19 வரை 407 அம்மா உணவகங்களின் விற்பனை தொகையை (₹184.86) விட செலவுத் தொகை (₹661.61 கோடி) அதிகமாக உள்ளது.  அதாவது, ₹483.75 கோடி அதிகம் (இழப்பு) உள்ளது. இந்த செலவுத் தொகை முழுவதும் சென்னை மாநகராட்சி செலவீனத்தில் மட்டும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கடும் நிதி சுமையில் அம்மா உணவகங்களை நடத்திவரும் நிலையில் அரிசி, கோதுமை கொள்முதல் செய்ததற்காக நுகர்பொருள் வாணிப கழகம் குறிப்பிட்டுள்ள விலை வித்தியாச தொகையான முறையே ₹44,01,79,490.80 மற்றும்  ₹1,93,15,250.00 ஐ வழங்குவது சென்னை மாநகராட்சிக்கு பெரும் நிதி சுமையை ஏற்படுத்தும்.

 எனவே சென்னையில் இயங்கி வரும் அம்மா உணவகங்களுக்கு மானிய விலையில் அரிசி, கோதுமை வழங்குவது மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க  வேண்டும். திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது கொள்முதல் செய்வதற்கான அரிசி ₹71 கோடியே 89 லட்சத்து 46 ஆயிரத்து 253 மற்றும் கோதுமைக்கு ₹1 கோடியே 93 லட்சத்து 15 ஆயிரத்து 250 ஐ நுகர்பொருள் வாணிப கழகம்  குறிப்பிட்டுள்ள விலை வித்தியாச தொகைக்கு முழுமைக்கும் விலக்கு அளிக்க வேண்டும்.  சென்னை மாநகராட்சியின் கருத்துருவை அரசு விரிவாக ஆய்வு செய்து இந்த திட்டம் தொடர்பான நடைமுறையில் உள்ள அரசாணையின்படி திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை மானிய விலையில் அரிசி மற்றும் கோதுமை  வழங்கப்பட்டதை மேலும் ஒரு வருடத்திற்கு தொடரலாம் என்று ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Tags : restaurants ,Thai , 483 crore loss to mother restaurants due to cost overruns: The subsidy price of rice and wheat has been extended for one year
× RELATED இரண்டாம் உலகப் போரின்போது சியாம்...