×

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு: தலைவர் பதவிகளுக்கு 11ம் தேதி மறைமுக தேர்தல்

சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர். தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 11ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 513 இடங்களுக்கான முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில்  திமுக அதிகபட்சமாக 243 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும், அதிமுக 214 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் கைப்பற்றியுள்ளது. அடுத்தபடியாக, காங்கிரஸ் 22 இடங்களையும், பாஜ, இந்திய கம்யூனிஸ்ட் தலா 7 இடங்களையும், தேமுதிக 3  இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

மற்ற கட்சிகள் 22 இடங்களை கைப்பற்றியுள்ளன. 5090 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 5087 இடங்களுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திமுக 2100 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக 1781 இடங்களை கைப்பற்றியுள்ளது. அடுத்ததாக, காங்கிரஸ் 131  இடங்களையும், தேமுதிக 91 இடங்களையும், பாஜ 85 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 62 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 33 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மற்றவர்கள் 795 இடங்களை கைப்பற்றியுள்ளனர்.
 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 271 இடங்களையும், அதிமுக கூட்டணி 240 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2199 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மற்ற கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 512 இடங்களை கைப்பற்றியுள்ளனர். கட்சி அடிப்படை இல்லாத பதவிகளில் 9616 ஊராட்சி மன்ற தலைவர்களும், 76 ஆயிரத்து 712 ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர். தொடர்ந்து, மறைமுக  தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

இதன்படி 27 மாவட்ட ஊராட்சி தலைவர்  மற்றும் துணைத் தலைவர் பதவியிடம், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியிடம், 9624 கிராம ஊராட்சி துணை தலைவர் உள்ளிட்ட 10,306 பதவிகளுக்கான மறைமுக  தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இதற்கான தேர்தல் 11ம் தேதி நடைபெறுகிறது.

பதவியேற்பு எப்படி?

ஊராட்சி அலுவலகங்களில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் முதலில் ஊராட்சி தலைவர் பதவியேற்பார். அதன்பின், ஊராட்சி தலைவர் முன்னிலையில் வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். ஒன்றிய அலுவலகத்தில்  நடக்கும், ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவில், முதலில் மூத்த ஒன்றியக்குழு கவுன்சிலர் தேர்வு செய்யப்படுவார். அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் பதவியேற்பார். அதன்பின், மூத்த உறுப்பினர் முன்னிலையில்,  மற்ற ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் பதவியேற்பார்கள். இதே நடைமுறை மாவட்ட கவுன்சிலர் பதவியேற்பிலும் பின்பற்றப்படும்.

Tags : Rural Local Elections , Those who won the Rural Local Elections will be sworn in today
× RELATED 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில்...