×

உள்ளாட்சி தேர்தல் தோல்வி எதிரொலி: அதிமுக கூட்டணியில் வெடித்தது மோதல்...பாஜ, பாமக, தேமுதிக பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை அடுத்து அதிமுக கூட்டணிக்கு எதிராக பாஜக, தேமுதிக, பாமக கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. தனித்து  போட்டியிட்டு இருந்தால் அதிக இடங்களை பிடித்திருப்போம் என்றும் இந்த  கட்சிகளின் தலைவர்கள் கூறியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி தர்மத்தை மீற வேண்டாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த கூட்டணி அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்தது. உள்ளாட்சி தேர்தல் தொகுதி  பங்கீட்டின் போது பல்வேறு சிக்கல்கள் நீடித்தது. அதாவது, கேட்ட தொகுதியை தரவில்லை என்று கூட்டணி கட்சிகள் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வந்தனர்.

தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருந்ததால் கிடைத்த இடத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் நிலை ஏற்பட்டதாக அக்கூட்டணியினரே குற்றம் சாட்டினர். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிவு வெளி வந்துள்ளது.  அதில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. ஆளுங்கட்சி தான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் என்ற நிலையை திமுக இந்த வெற்றியின் மூலம் உடைத்துள்ளது.  அது மட்டுமல்லாமல் ஆளுங்கட்சியின் பணம் பலம், தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது, முறைகேடு போன்றவைகள் அரங்கேறிய போதும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று அதிமுகவுக்கு ஷாக்கை  ஏற்படுத்தியிருந்தது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு இரண்டு நாள் கூட ஆகவில்லை.

அதற்குள் அதிமுக கூட்டணியில் சர்ச்சை வெடித்துள்ளது. பாமக சார்பில் நடந்த உள்ளரங்க கூட்டத்தில் பேசிய பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி,  உள்ளாட்சி தேர்தலில் நாம் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம். நாம் தான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி. சமீபத்தில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட பாமக உதவியால்தான் அதிமுக வெற்றி பெற முடிந்தது என்று  பேசி அரசியலில் அதிர்வலையை உருவாக்கினார். அந்த பிரச்னையே கூட்டணிக்குள் முடியவில்லை. இந்நிலையில் தனித்து போட்டியிட்டு இருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்போம் என்று கூட்டணியில் இருந்த பாஜக, தேமுதிக குற்றம் சாட்டியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில்  அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தலில் பாஜவுக்கு மக்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர். கணிசமான வெற்றியை தந்து பாஜகவுக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள். தமிழகத்தில் பாஜ காலம் தொடங்கிவிட்டது.  என்னை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு செல்வாக்கை காட்ட வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருந்தது. அப்படி போட்டியிட்டு இருந்தால் நிச்சயமாக இதை விட அதிகமான இடங்களில்  வென்று இருப்போம். ஏனென்றால் அதிகமான இடங்களில் நாங்கள் போட்டியிட்டு இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட தேமுதிக ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெங்கடேசன் தலைமை தாங்கி பேசியதாவது:  தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து மக்கள் அளித்துள்ள முடிவுகளை அனைவரும் அறிந்திருப்பீர்கள். நம் கூட்டணி கட்சியைவிட, திமுக சில இடங்களில் அதிகளவு வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பல  காரணங்களை எடுத்துரைக்கலாம்.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா நம் வெற்றியை குறைத்து விட்டது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில் நம் கூட்டணி அபார வெற்றி பெற்றது. அதனால் இந்த உள்ளாட்சி தேர்தலில் 90  சதவீத இடங்களில் வெற்றிபெறும் என்று நாமும், கூட்டணி கட்சிகளும் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால் உள்ளாட்சியில் பெரும்பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளிடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இல்லை. இதனை ஒருங்கிணைப்பு செய்யவேண்டிய அதிமுகவும் அந்த வேலையை செய்யவில்லை. தேமுதிகவுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அதிமுக  கொடுக்கவில்லை. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சீட்டு கொடுத்துவிட்டு, தேமுதிக நிற்கும் அதே பகுதியில் அதிமுகவினர் சிலரை சுயேட்சையாகவும் களமிறக்கினார்கள். உள்ளாட்சி தேர்தலில் நாம் வஞ்சிக்கப்பட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணி தர்மத்தை மீற வேண்டாம்

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம், நிருபர்கள், “பாஜக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு இருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கிறது என்று முன்னாள் மத்திய  அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருக்கிறாரே? என்று கேட்டனர். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், “ அது அவருடைய கருத்தா? கட்சியின் கருத்தா? என்று தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் கூட்டணியில் இருந்து கொண்டு  இதுபோல் பேசுவது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல” என்றார்.

Tags : Election ,Government ,Local Government Election ,Conflict ,alliance ,AIADMK ,Baja , Echoing Local Government Election: Conflict erupts in AIADMK alliance ... Baja, MP
× RELATED தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு...