×

பொன்னேரி பகுதியில் புகையான் நோய் தாக்குதல்: 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் சம்பா பருவத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் நெற்பயிர்களை புகையான் நோய் தாக்கியுள்ளது. பொன்னேரி பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் புகையால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாததால் அருகில் உள்ள விளை நிலங்களுக்கும் பரவி வருகிறது. பால் பிடித்து கதிர் முற்றிவரும் சூழலில் அதனை பதராக மாற்றி வருகிறது. ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 25 ஆயிரம் செலவு செய்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், புகையான் நோய் தாக்கியுள்ளதால் பல லட்சம் செலவு செய்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். நோய் தாக்கம் காரணமாக ஏக்கருக்கு 30 மூட்டை அறுவடை செய்ய வேண்டிய இடத்தில் 2 மூட்டை நெல்கூட வருமா என தெரியாமல் விவசாயிகள் விழிபிதுங்கி நிற்கின்றார்கள். அறுவடை கூலிக்கு கூட நெல் வராததால் அதனை அப்படியே விட்டுவிட்டு மீண்டும் உழுதுவிடும் நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

வேளாண்துறை அலுவலகத்தில் விதை நெல் வாங்கி நாற்று வளர்த்து அவர்களின் அறிவுறுத்தலின் படியே செம்மை நெல் சாகுபடி செய்து வேளாண்மைத்துறை பரிந்துரைக்கும் பூச்சி கொல்லி மருந்து தெளித்தும் புகையான் நோய் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. பயிர் காப்பீட்டு தொகையும் முறையாக விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. அடகு வைத்துள்ள நகைகளை மீட்க வழின்றி தவித்து வருகிறோம். இப்படியே போனால் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்படுவோம். எனவே, தமிழக அரசு உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும்’ என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

Tags : area ,Ponneri , Ponneri, Disease Attack, Rice, Influence
× RELATED வாட்டி வதைக்கும்...