×

வேலூர் புதிய பஸ் நிலையம் மாற்றி அமைப்பதற்காக தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை: ஆர்டிஓ தகவல்

வேலூர்: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு மாநகராட்சிக்கும் ரூ.1,145 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் வேலூர் உள்பட 11 மாநகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக வேலூர் கோட்டை அகழி தூர்வாருதல், கோட்டை சுவரில் உள்ள செடி கொடிகளை அகற்றுதல், மல்டி லெவல் கார் பார்க்கிங் ஆகியவை அமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக புதிய பஸ் நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு புதிய தொழில்நுட்ப வடிவமைப்புளுடன் ஓரடுக்கு பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கென ரூ.45.61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டது. இதையொட்டி வெளியூர் பஸ்களுக்கான தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பஸ் நிலையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஆர்டிஓ ராமகிருஷ்ணன், மாநகராட்சி செயற்பொறியாளர் கண்ணன், போக்குவரத்து ஆய்வாளர் கருணாநிதி மற்றும் குழுவினர் நேற்று புதிய பஸ் நிலையம் அருகே செல்லியம்மன் கோயில் பின்புறத்தில் உள்ள இடத்தில் இருந்து பஸ்களை இயக்குவது தொடர்பாக நிலத்தை அளவீடு செய்தனர். காலி இடத்தில் பஸ்களை நிறுத்தி இடவசதி, பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் நுழைந்து வெளியேற போதியளவில் இடவசதி உள்ளதா என்றும் ஆய்வு நடத்தினர்.

இதுகுறித்து ஆர்டிஓ ராமகிருஷ்ணன் கூறுகையில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு வேலூர் புதிய பஸ் நிலையத்தின் ஒருபகுதியில் உள்ள காலிமனையில் இருந்தும், திருவண்ணாமலைக்கு பழைய பஸ் நிலையத்தில் இருந்தும் பஸ்கள் இயக்க ஆலோசனை நடந்து வருகிறது. அதேபோல், ஒசூர், பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு பயணிகளின் வசதிக்கேற்ப பஸ்கள் இயக்கப்படும். இதுதொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கலெக்டர் ஒப்புதலுடன் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும் என்றனர்.

Tags : bus stations ,Vellore , Vellore, New Bus Station, RTO
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...