×

கம்பெனி தீர்ப்பாயம் சாதகமாக தீர்ப்பளித்திருந்தாலும் டாடா சன்ஸ் குழும தலைவராக மீண்டும் பொறுப்பேற்க மாட்டேன்: சைரஸ் மிஸ்திரி

மும்பை: டாடா சன்ஸ் குழும தலைவராக மீண்டும் பொறுப்பேற்க மாட்டேன் என்று சைரஸ் மிஸ்திரி அறிவித்துள்ளார். கம்பெனி தீர்ப்பாயம் எனக்கு சாதகமாக தீர்ப்பளித்திருந்தாலும் டாடா சன்ஸ் குழும தலைவராக மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் மிகப் பெரிய தொழில் குழும மான டாடா சன்ஸ் உப்பில் இருந்து கம்ப்யூட்டர் மென்பொருள் வரை என பல்வேறு பொருட்கள் உற்பத்தி மற்றும் சேவையில்ஈடுபட்டுள்ளது. இதன் தலைவராக இருந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா 2012ல் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதையடுத்து அதன் தலைவராக மிகப் பெரிய பணக்கார குடும்ப தொழில் நிறுவனமான சபோர்ஜி பலோன்ஜி குழுமத்தைச் சேர்ந்த சைரஸ் மிஸ்திரி 2012, டிசம்பரில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தில் சைரஸ் மிஸ்திரிக்கு 18 சதவீத பங்கு உள்ளது. டாடா அறக்கட்டளை, டாடா குழும நிறுவனங்கள் மற்றும் ரத்தன் டாடாவுக்கு, 81 சதவீத பங்கு உள்ளது.இதற்கிடையே 2016 அக்டோபரில் சைரஸ் மிஸ்திரியை பதவியில் இருந்து நீக்கி ரத்தன் டாடா நடவடிக்கை எடுத்தார். நிறுவனத்தின்பல்வேறு இயக்குனர்களையும் மாற்றி அமைத்தார்.டாடா சன்ஸ் தலைவராக, என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். கவுரவத் தலைவராக ரத்தன் டாடா தொடர்ந்தார். தன்னை நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து, சைரஸ் மிஸ்திரி, கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின், மும்பை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். சமீபத்தில் இந்த வழக்கில், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்தது. அதில், சைரஸ் மிஸ்திரியை நீக்கியது செல்லாது.

அவரை மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பை எதிர்த்து, டாடா சன்ஸ் நிறுவனம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்தாண்டு டிச. 18ல் அளித்த தீர்ப்பின்போது தங்களை விமர்சித்து கூறப்பட்டதை எதிர்த்து கம்பெனிகள் பதிவாளர் சார்பில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் டாடா சன்ஸ் குழும தலைவராக மீண்டும் பொறுப்பேற்க மாட்டேன் என்று சைரஸ் மிஸ்திரி அறிவித்துள்ளார்.


Tags : Tata Sons ,board ,company ,Cyrus Mistry ,Tribunal ,group , Company Tribunal, Tata Sons, Cyrus Mistry
× RELATED குடிநீர் கட்டணங்களை செலுத்த மார்ச்...