×

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் தத்தளிக்கும் திருவாரூர் புதிய பேருந்து நிலையம்

* ரூ.17 கோடி அரசு பணம் வீண்
* பொதுமக்கள், வர்த்தகர்கள் குற்றச்சாட்டு

திருவாரூரில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பின்னர் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின்னரும், அந்த பேருந்து நிலையம் தற்போது பொது மக்களுக்கும் பயணிகளுக்கும் மட்டுமின்றி வர்த்தகர்களுக்கும் பலன் இல்லாமல் இருந்து வருகிறது. திருவாரூரில் இருந்து வந்த பேருந்து நிலையமானது கடந்த 46 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட நிலையில் அப்போது இருந்து வந்த மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் பேருந்துகள் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டதால் இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கு கூட இடமில்லாமல் இருந்து வந்தது. வெளியூர்களிலிருந்து வந்து செல்லும் பயணிகளுக்கு ஏற்ப கழிவறை வசதி, முதியோர்கள், கர்ப்பிணி மற்றும் கை குழந்தையுடன் வரும் பெண்கள், மாற்றுதிறனாளிகள் போன்றவர்கள் அமர்வதற்கு கூட எவ்வித இட வசதியும் இல்லாமல் இருந்தது மற்றும் இந்த பேருந்து நிலையத்திற்குள் மாநில அரசின் நெடுஞ்சாலையும் இருந்து வருவது போன்ற பல்வேறு காரணங்களால் நகரில் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டன.

இந்த நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று கடந்த தி.மு.க ஆட்சி காலத்தின் போது 2010ம் ஆண்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக திருவாரூர் நகராட்சி 30வது வார்டுக்குட்பட்ட தியாகபெருமாநல்லூர் பகுதியில் 18 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு பேருந்து நிலையம் அமைப்பதற்காக ரூ.6 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் 2011ல் ஆட்சி மாற்றம் காரணமாக திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்பதால் இந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதன்பின்னர் அரசியல் கட்சியினர், சேவை சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் என அனைவரது கோரிக்கையின் பேரில் பணிகள் துவங்கப்பட்டு சுமார் 7 ஆண்டுகள் வரையில் ரூ.13 கோடியே 36 லட்சம் மதிப்பில் ஆமை வேகத்தில் நடைபெற்ற பணிகள் நிறைவுபெற்று இந்த புதிய பேருந்து நிலையமானது கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 27ந்தேதி முதல்வர் பழனிசாமி மூலம் வீடியோ கான்பிரன்சிங் முறையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் இடநெருக்கடியை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது இந்த பேருந்து நிலையமானது திறக்கப்பட்ட பின்னரும் பயணிகளுக்கு பலனில்லாமல் இருந்து வருகிறது.காரணம் திருவாரூரிலிருந்து நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்குள் வராமல் வழியில் பைபாஸ் ரோடு ரயில்வே மேம்பாலம் அருகிலேயே பயணிகளை இறக்கி விடுவதும் திருச்சி, தஞ்சை, மதுரை மற்றும் கும்பகோணம், மன்னார்குடி போன்ற வழிதடங்களில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு வருவதாலும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு ஆட்டோ மூலம் செலவு செய்து பயணிகள் துன்பபடும் நிலை இருந்து வருகிறது.

இதனையடுத்து பொது மக்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினரின் போராட்டத்தையடுத்து நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி மார்க்கத்திலிருந்து திருவாரூர் வரும் அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்று வர வேண்டும் என்று கடந்த 8 மாதத்திற்கு முன்னர் அப்போது ஆர்.டிஒ வாக இருந்த முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவினை அரசு போக்குவரத்து கழகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்று கொண்ட நிலையிலும் தற்போது வரையில் பெரும்பாலான பேருந்துகள் இந்த உத்தரவினை கடைபிடிக்காமல் இருந்து வருவதால் பயணிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகிவருகின்றனர். இதனையடுத்து பழைய பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் மற்றும் இந்த பேருந்து நிலையத்தை நகர பேருந்து நிலையமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீண்டும் வர்த்தகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போதிலும் இது குறித்து நகராட்சி நிர்வாகமோ, அரசு போக்குவரத்து கழகமோ கண்டு கொள்ளாமல் இருந்து வருவதால் பொது மக்கள் மற்றும் பயணிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகும் நிலை இருந்து வருகிறது.

இதுமட்டுமின்றி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்களுக்கும் பொது மக்கள் மற்றும் பயணிகள் செல்லாமல் வழியில் மேம்பாலம், தஞ்சை சாலை, மயிலாடுதுறை சாலை மற்றும் கும்பகோணம் சாலை என வழியில் பேருந்துகளை நிறுத்தி ஏறி, இறங்குவதன் காரணமாக புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் இரண்டுமே வெறிச்சோடி காணப்படுவதன் காரணமாக இதனை நம்பி இருந்து வரும் வர்த்தகர்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். மேலும் புதிய பேருந்து நிலையத்தில் கடைகளை ஏலம் எடுப்பதற்காக போட்டி போட்டு கொண்டு கடை ஒன்றுக்கு ரூ.3 லட்சம் முதல் 4 லட்சம் வரையில் முன்பணம் மற்றும் மாத வாடகையாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் என கொடுத்து வரும் வர்த்தகர்கள் இதற்கான பலன் கிடைக்காமலும் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கொடுக்க முடியாமலும் பெரும்பாலான வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

எனவே புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும், பழைய பேருந்து நிலையத்தை நகர பேருந்து நிலையமாக அறிவித்து அங்கிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு என தனியாக பேருந்துகளை இயக்க வேண்டும் இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் 2 பேருந்து நிலையங்களும் மக்களுக்கும், பயணிகளுக்கும் மட்டுமின்றி வர்த்தகர்களுக்கும் பயனளிக்கும் என்பதால் இதற்கு நகராட்சி நிர்வாகமும், அரசு போக்குவரத்து கழகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அமைப்பின் பொது செயலாளர் ரமேஷ் கூறுகையில், இட நெருக்கடியின் காரணமாக புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டாலும், பல்வேறு ஊர்களில் பழைய பேருந்து நிலையம் என்பது வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. தஞ்சையில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 10 ஆண்டு காலத்திற்கு மேல் வரையில் பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் சென்று வந்தன. ஆனால் திருவாரூரில் மட்டும் பழைய பேருந்து நிலையத்தினை உடனடியாக மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பழைய பேருந்து நிலையத்தை பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் வர்த்தகர்கள் என நாள் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்தி வந்த நிலையில் உடனடியாக மூடுவது என்பது ஏற்றுகொள்ளமுடியாததாகும்.

இந்த பேருந்து நிலையம் செயல்படாததன் காரணமாக நகர மக்களும், வணிகர்களும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பழைய பேருந்து நிலையத்திற்குள் தனியார் பேருந்துகள் வந்து செல்ல தயாராக உள்ள போதிலும் அதனை அரசு போக்குவரத்து கழகம் தடுத்து வருகிறது. இதன் காரணமாக நகரில் பழைய பேருந்து நிலையம் மட்டுமின்றி புதிய பேருந்து நிலையமும் மக்களுக்கு பலனளிக்காமல் இருந்து வருகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும். இவ்வாறு ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ரயில் மற்றும் பேருந்து உபயோகிப்பாளர் சங்க மாவட்ட செயலாளர் பேராசிரியர் பாஸ்கரன் கூறுகையில், புதிய பேருந்து நிலையம் என்பது காலத்தின் கட்டாயம் தான் அதனை மறுப்பதற்கு இல்லை. இருப்பினும் பழைய பேருந்து நிலையம் என்பது நகரின் மையப்பகுதியில் இருந்து வருகிறது. இதனை வைத்து தான் சுற்றுப்புறங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் வர்த்தக நிறுவனங்களும், பள்ளி,கல்லூரிகளும், அரசு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த பழைய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வருவது என்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்களையுமே மக்கள் புறக்கணித்து நடுவழியில் ஏறி இறங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

எனவே 2 பேருந்து நிலையங்களும் மக்கள் பயன்பாட்டில் இருந்தால்தான் பயணிகளுக்கும், வர்த்தகர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பழைய பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும். இது மட்டுமின்றி 2 பேருந்துகளை நிலையங்களையும் இணைக்கும் வகையில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Tags : bus station ,Thiruvarur ,facilities , Basic, Thiruvarur New Bus Stand
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்