×

கொள்ளையர்களின் தாக்குதல்.. இயற்கை சீற்றங்களின் அபாயம்... கேள்விக்குறியாகும் லாரி டிரைவர்களின் உயிர்பாதுகாப்பு

* நாமக்கல் மாவட்டத்தில் பதறும் குடும்பங்கள்
* நாமக்கல் மாவட்டத்தில் பதறும் குடும்பங்கள்

நாமக்கல்: தமிழகத்தில் லாரிகள் அதிகம் நிறைந்த நகரமாக நாமக்கல் திகழ்கிறது. சுமார் 50 ஆயிரம் லாரிகள் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிறது. 35 ஆயிரம் லாரி டிரைவர்கள் நாமக்கல், திருச்சி, சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். வெளி மாநிலங்களுக்கு தமிழகத்தை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் லாரிகள் தினமும் சரக்கு ஏற்றி செல்கிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான சரக்குலோடுகள் தமிழகத்தில் இருந்து செல்கிறது. தமிழகத்தை சேர்ந்த லாரிகள் பெரும்பாலும் கர்நாடகா, மகராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, ஜம்மு போன்ற மாநிலங்களுக்கு அதிக அளவில் இயக்கப்படுகிறது. வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழக லாரி டிரைவர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் கடந்த 10 ஆண்டாக இருந்து வருகிறது.

கர்நாடகா, மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தமிழக லாரிகள் கடத்தப்பட்டு, டிரைவர்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவது ஆண்டுக்கணக்கில் நடந்து வரும் சோகமாக இருக்கிறது. கொலை செய்யப்பட்ட டிரைவர்களின் உடல்கள் பல ஆண்டாகியும் கிடைக்காதநிலையும் இருக்கிறது. நாளுக்கு நாள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழக லாரி டிரைவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதால், வெளிமாநிலங்களில் லாரி ஓட்டி வந்த பலர் தற்போது தமிழகத்துக்குள் மட்டுமே லாரிகளை இயக்கி வருகிறார்கள். தற்போது லாரித்தொழிலில் இவேபில், ஆன்லைன் அபராதம், டோல்கேட்களில் பாஸ்டேக், பெட்ரோல் நிரப்ப ஏடிஎம் போல கார்டுகள்  என ஆன்லைன் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.  இதை வைத்தே லாரி டிரைவர்களிடம் வெளி மாநிலங்களில் போலீசார், ஆர்டிஓக்கள் மிரட்டி பணம் பறிக்கும் நிகழ்வுகளும் அதிகம் நடக்கிறது.

கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் ஆர்டிஓக்கள், ரவுடிகளின் துணையுடன் மாநிலத்தின் பல பகுதிகளில் தமிழக லாரி டிரைவர்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள். பணம் தர மறுக்கும் டிரைவர்களை கொடூரமாக தாக்குகிறார்கள். இதனால், வெளிமாநிலங்களுக்கு செல்லும் லாரி டிரைவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அதிகரித்து வருகிறது. ஜம்மு, காஷ்மீரில் தற்போது குளிர் அதிகம் இருப்பதால், சாலைகள் முழுவதும் பணிப்பொழிவுகள் அதிகரித்து பனிக்கட்டிகளாக மாறிவிட்டது. இதனால் அங்கு லோடு ஏற்றி செல்லும் தமிழக டிரைவர்கள், கடந்த மாதம் 10 நாட்களாக சொந்த ஊருக்கு வரமுடியாமல் தவித்தனர். இப்படி வெளி மாநிலங்களுக்கு லோடு ஏற்றி செல்லும் தமிழக டிரைவர்களுக்கு, இயற்கை சீற்றம் மற்றும் வழிப்பறி கொள்ளையர்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

காஷ்மீர் ஆப்பிள் தமிழகத்துக்கு எப்படி தேவையோ, அதே போல தமிழகத்தில் உற்பத்தியாகும் தேங்காய், சிவகாசி தீப்பெட்டி, பட்டாசுகள், தூத்துக்குடி உப்பு போன்றவை வெளி மாநில மக்களுக்கு அவசிய தேவையாகும். ஆனால், இவற்றை கொண்டு செல்லும் (சரக்குகளை ஏற்றி செல்லும்) தமிழக லாரி டிரைவர்களின் உயிருக்கு, வெளிமாநில போலீசார் எந்த பாதுகாப்பும் அளிப்பதில்லை. எனவே, தமிழக அரசு வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக லாரி டிரைவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை  எடுக்கவேண்டும் என இங்குள்ள லாரி உரிமையாளர்கள் மாநில அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால், அதற்கு இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை. கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் ஆர்டிஓக்கள், ரவுடிகளின் துணையுடன் மாநிலத்தின் பல பகுதிகளில் தமிழக லாரி டிரைவர்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள். பணம் தர மறுக்கும் டிரைவர்களை கொடூரமாக தாக்குகிறார்கள். இதனால், வெளிமாநிலங்களுக்கு செல்லும் லாரி டிரைவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அதிகரித்து வருகிறது.

ஒரே நாடு, ஒரே சாலையால் பிரச்னை  குறைய வாய்ப்பு: ஏஐஎம்டிசி நிர்வாகி நம்பிக்கை
ஏஐஎம்டிசி டோல் கமிட்டிஇணைத்தலைவர் நல்லதம்பி கூறியதாவது: வெளி மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி செல்லும் தமிழக லாரி டிரைவர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க இரு மாநில அரசும் இணைந்து முயற்சிக்கவேண்டும். இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும், கர்நாடகாவில் தான் தமிழக டிரைவர்கள் அதிகம் பிரச்னையை சந்திக்கிறார்கள். ரவுடிகளை வைத்து கொண்டு போலீசார் டிரைவர்களிடம் ஒவ்வொரு இடத்திலும் ₹200, ₹300 மாமூல் வசூலிக்கிறார்கள். தற்போது லாரித்தொழிலில் இவேபில் நடைமுறைக்கு வந்துள்ளதால், சோதனை சாவடிகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. ஆனால் போலீசார், ஆர்டிஓக்களின் தொந்தரவு அதிகம் இருக்கிறது. டோல்கேட்டுகளை கடக்கும் லாரிகளில் 80 சதவீதம் தற்போது பாஸ்ட்டேக் ஸ்டிக்கருக்கு மாறியாச்சு. ஆனால் பல டோல்கேட்டுளில் இதில் குளறுபடி நிகழ்கிறது. லாரி டிரைவர்களிடம் இரண்டு முறை பணம் பெறும் நிலை இருக்கிறது.

இதை போக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.ஒரேநாடு, ஒரே தேர்தல், ஒரேநாடு, ஒரே ரேசன் கார்டு என்ற மத்திய அரசின் புதிய திட்டப்படி, ஒரே நாடு, ஒரே சாலை என்பதை கொண்டு வந்தால் லாரிகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் வழிப்பறி, அபராதம் விதிப்பது தடுக்கப்படும். லாரிகளில் ஓவர்லோடு ஏற்றி சென்றால் ஒரு மாநிலத்தில் அபராதம் செலுத்தினால் அத்துடன் விடுவதில்லை. அந்த லாரி எந்த மாநிலத்தில் கடைசியாக சரக்குகளை இறக்குகிறதோ அங்கு வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலை மாறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகத்தில் இருந்து தொடங்கும் மிரட்டல்: லாரி உரிமையாளர் ஆதங்கம்
லாரி உரிமையாளர் சந்திரசேகரன் கூறுகையில், ‘‘வெளி மாநிலங்களில் தமிழக லாரி டிரைவர்கள் ரவுடிகளால் தாக்கப்படுகிறார்கள். லாரிகளில் உள்ள சரக்குகள், வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்படுகிறது. இது பற்றி அங்குள்ள காவல்நிலையங்களில் புகார் அளித்தால், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குறிப்பாக கர்நாடகா மாநிலங்களில் ஊருக்கு ஊர், ஆர்டிஓக்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. ரவுடிகளை வைத்து லாரி டிரைவர்களை மிரட்டி, பணம் பறிக்கிறார்கள். கர்நாடக மாநிலத்துக்குள் செல்லாமல் பிற மாநிலங்களுக்கு செல்லமுடியாது. இதனால் கர்நாடக மாநிலத்தில் தமிழக லாரி டிரைவர்கள் அதிக அளவில் போலீசார் மற்றும் ஆர்டிஓக்கள், ரவுடிகளால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்னைக்கு தமிழக அரசு முடிவு கட்டவேண்டும். அம்மாநில அரசுடன் பேசி தமிழக டிரைவர்களை பாதுகாக்கவேண்டும்,’’ என்றார்.

உயிருக்கு பயந்து செல்வதேயில்லை: டிரைவர் அதிர்ச்சி தகவல்
டிரைவர் மாரப்பன் கூறுகையில், ‘‘வெளி மாநிலங்களில் சரக்குகளை ஏற்றிகொண்டு போகும்போதும், அங்கு இறக்கி கொண்டு ஊருக்கு வரும் வரையும்,  தினமும்  உயிரை பாதுகாத்து கொள்ளவே அதிகம் போராடவேண்டியுள்ளது. மகாராஷ்டிராவில் வழிப்பறி அதிகம். தனியாக லாரியில் சென்றால், வழிப்பறி கொள்ளையர்கள் டிரைவர்களை தாக்கி லாரியை கடத்தி சென்றுவிடுவார்கள். லாரிக்காக போராடினால் உயிரை இழக்கவேண்டியநிலை ஏற்படும். இப்படி பல டிரைவர்கள் வெளி மாநிலங்களில் உயிரை இழந்துள்ளனர். உயிருக்கு பயந்து, பல லாரி டிரைவர்கள் இப்போதெல்லாம் வெளி மாநிலத்துக்கு லோடு ஏற்றி செல்வதில்லை,’’ என்றார்.

தமிழக போலீசாரும் மிரட்டி பணம் வசூல்: டிரைவர் ஆதங்கம்
டிரைவர் பழனிசாமி கூறுகையில், ‘‘ஒரு லாரி, இரண்டு லாரி வைத்து தொழில் செய்யும் லாரி ஓனர் தான், இப்போதெல்லாம் வெளிமாநிலங்களுக்கு லோடு ஏற்றிசெல்கிறார்கள். குஜராத், ராஜஸ்தான், அரியான மாநிலங்களிலும் தற்போது வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துவிட்டது. இவற்றை எல்லாம் தடுத்தால் தான், வெளி மாநிலங்களுக்கு  இனி வரும் காலங்களில் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும். வெளி மாநிலங்களுக்கு லோடு ஏற்றி செல்லவும் டிரைவர்கள் வருவார்கள். வெளி மாநில போலீசார் தான், டிரைவர்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள் என்றால், தமிழகத்தில் லாரி டிரைவர்கள் சீட் பெல்ட் அணியவேண்டும் எனக்கூறி இங்குள்ள போலீசாரும் பணம் பறிக்கின்றனர்,’’ என்றார்.

Tags : Robbery attack ,disasters ,truck drivers ,disaster , Questionnaire, truck driver, lifeguard
× RELATED உதகையில் லாரி ஓட்டுநர்கள் 24 மணி நேரம் வேலைநிறுத்தம் போராட்டம்!!