×

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு: இன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான இன்று (5ம்தேதி) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். நாளை (6ம் தேதி) அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. 108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியது ரங்கம் ரங்கநாதர் கோயிலாகும். ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில் உள்ளூர், வெளியூர், மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 26ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன்பின் பகல்பத்து உற்சவம் கடந்த 27ம் தேதி துவங்கியது. பகல்பத்து உற்சவத்தின் 10ம் நாளாகிய நிறைவு இன்று (5ம் தேதி) நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

பக்தர்கள் மோட்சம் அடைய விரும்பினால் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போன்ற ஆசைகளை துறக்க வேண்டும். ஆசைகளில் கொடூரமான ஆசை பெண்ணாசை. எனவே, பெண்ணாசையை துறந்தவர்கள் தான் மோட்சத்தை அடையலாம் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் நம்பெருமாள் இன்று (5ம் தேதி) மோகினி அலங்காரத்தில் அழகிய பெண் வேடத்தில் எழுந்தருளி பக்தர்கள் முன்பு காட்சியளிக்கிறார்.

மோகினி அலங்காரம்
இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து மோகினி அலங்காரத்தில் காலை 6 மணிக்கு புறப்பட்டு பகல்பத்து உற்சவ மண்டபமான அர்ச்சுனமண்டபத்திற்கு காலை 7 மணிக்கு வந்து சேருகிறார். 7 மணிமுதல் 7.30 மணிவரை திரை. அதன்பின் காலை 7.30 மணி முதல் 11 மணி வரை அரையர் சேவை மற்றும் பொது ஜன சேவையுடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதன்பின் இரண்டாவது அரையர் சேவையாக திருமொழியில் இருந்து ராவணவதம் நிகழ்ச்சி பொதுஜன சேவையுடன் காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து மதியம் 2.30 மணிமுதல் 3 மணிவரை வெள்ளி சம்பா அமுது செய்ய திரை. அதன்பின், உபயகாரர்கள் மரியாதையுடன் பக்தர்கள் தரிசனம் மாலை 3மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை பொது ஜன சேவை நடக்கிறது.

அதன்பின் நம்பெருமாள் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் பகல்பத்து அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு ஆரியபடாள் வாசல் வந்து சேருகிறார். அதன்பின் அங்கிருந்து திருக்கொட்டாரம் பிரகாரம் வழியாக வலம் வந்து கருட மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு வந்து சேருகிறார். அங்கு ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுக்கு மரியாதை செய்வித்த பின்னர் இரவு 8.30 மணிக்கு கருடமண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இன்று மூலவர் முத்தங்கி சேவை காலை 6 மணிமுதல் மாலை 4.30 மணிவரை. அதன்பின் மூலஸ்தான சேவை கிடையாது. நாளை (6ம் தேதி) அதிகாலை பரமபரவாசல் திறப்பு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழு தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், சுந்தர் பட்டர், நந்து பட்டர் கோயில் அலுவலர்கள்,பணியாளர்கள் செய்து உள்ளனர்.


Tags : Opening ,Srirangam Temple ,Opening Ceremony of Paradise , Opening Ceremony , Paradise,Srirangam Temple tomorrow
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு