×

பொருளாதார மந்த நிலை விளைவு 75 சதவீத கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்கள் மூடல்: பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிப்பு

கோவை: பொருளாதார மந்த நிலை காரணமாக கோவையில் 75 சதவீத கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகள் அதிகம் இருந்த காரணத்தால், தென்னிந்தியவில் மான்செஸ்டர் என்ற சிறப்பு பெற்றது. பஞ்சாலைகளுக்கான இயந்திரங்கள் தயாரிக்கும் ஆலை, விசைத்தறி தொழிற்கூடங்கள், பம்புசெட், ஆட்டோெமாபைல் உதிரிபாகம், லேத் ஒர்க்‌ஷாப், பவுண்டரி, வெட்கிரைண்டர் உற்பத்தி என 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கோவையில் இயங்குகின்றன. இதில், கிரைண்டர் மற்றும் கிரைண்டருக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன. கணபதி, ஆவாரம்பாளையம், பீளமேடு, பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.

இத்தொழிலை நம்பி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். கிரைண்டர் தயாரிப்பில் இந்தியாவில் 60 சதவீத பங்கு கோவை பெற்றுள்ளது. இங்கு, தயாரிக்கப்படும் வெட் கிரைண்டர்கள் உள்நாட்டு தேவை மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, 2017ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆகியவை இத்தொழிலை புரட்டிப்போட்டு விட்டது. ஏற்கனவே, மின்வெட்டு, மூலப்பொருள் விலை உயர்வு, ஸ்கில்டு லேபர் தட்டுப்பாடு, வங்கிக்கடன் மறுப்பு என பல்வேறு பிரச்னைகளால் கடந்த 2001ம் ஆண்டு முதல் கிரைண்டர் உற்பத்தி தொழில் தள்ளாட்டம் கண்டுவந்தது. இந்நிலையில், மத்திய அரசின் மேற்கண்ட நடவடிக்கை இத்தொழிலை ஒட்டுமொத்தமாக தலைகீழாக கவிழ்த்து விட்டது. ஆரம்பத்தில், கிரைண்டர் உற்பத்திக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

தொழில் கடும் நசிவு மற்றும் பலத்த எதிர்ப்பு காரணமாக இது 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனாலும், தொழில் மேம்படவில்லை. இதையடுத்து, தற்போது 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. ஆனாலும், நிலைமை சீராகவில்லை. முன்பு, வீட்டு உபயோக கிரைண்டர் சுமார் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும். தற்போது, தொழில் நெருக்கடி காரணமாக 2 ஆயிரம் ரூபாய்க்குகூட விற்பனையாவது இல்லை. இதனால், கிரைண்டர் உற்பத்தியாளர்கள், ஆலையை தொடர்ந்து நடத்த முடியாமல் திக்குமுக்காடுகின்றனர். தமிழக அரசின் இலவச கிரைண்டர் திட்டத்துக்கு, மாநில அரசு சார்பில் ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் கிரைண்டர் ஆர்டர் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது, அந்த ஆர்டரும் நின்றுவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக இத்தொழில் தொடர்ச்சியாக நெருக்கடியை சந்தித்து வருகிறது.

முன்பு ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கிரைண்டர் ஏற்றுமதி செய்யப்படும். இது தற்போது, வெறும் 2 ஆயிரம் கோடியாக குறைந்துவிட்டது. கிரைண்டர் உற்பத்தி மட்டுமின்றி, இதை சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. தொழில் மந்த நிலை காரணமாக, தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. உற்பத்தி மற்றும் விற்பனை மந்தம்  காரணமாக பல ஆலைகளுக்கு லேஆப் கொடுக்கப்பட்டு, தொழிலாளர்கள் வீட்டுக்கு  அனுப்பப்பட்டு விட்டனர். தற்போதைய நிலவரப்படி கோவையில் 75 சதவீத கிரைண்டர்  உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இது பற்றி கிரைண்டர் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: மாவாட்டும் இயந்திரம் நமது அன்றாட  பயன்பாட்டில் இருப்பவை. நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களும் பயன்படுத்தி  வரும் பொருள் இது.

ஆனால், இது ஆடம்பர பிரிவில் சேர்க்கப்பட்டு 28 சதவிகிதம்  ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இதுதான் இத்தொழில் அழிவுநிலைக்கு செல்ல முக்கிய காரணம். ஏற்கனவே கடந்த பத்து ஆண்டுகளாக தொழில் நெருக்கடியில் சிக்கித்தவிக்கையில் அடுத்த இடியாக, கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு வந்துவிட்டது. இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாக உள்ளது. தொழில் நெருக்கடிக்கு தீர்வு காணாமல், சிறு, குறுந்தொழில்கள் மீது தாக்குதல் நடத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். கிரைண்டர் உற்பத்தி உள்ளிட்ட குறுந்தொழில்களுக்கு வரி விலக்கு அளித்தால் மட்டுமே இத்தொழில்களை காப்பாற்ற முடியும். கோவை வட்டாரத்தில், நாள் ஒன்றுக்கு சர்வ சாதாரணமாக ரூ.150 கோடி அளவுக்கு கிரைண்டர் உற்பத்தி இருந்தது. இது தற்போது ரூ.20-30 கோடி அளவுக்கு சுருங்கி விட்டது.

இந்தியா முழுவதும் பரவிக்கிடக்கும் சிறு மற்றும் குறுந்தொழில்கள் அழிக்கப்பட்டால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு காலூன்ற முடியும். எனவே, உள்ளூர் நிறுவனங்களை சந்தையில் இருந்து அப்புறப்படுத்த, டிஜிட்டல் பரிவர்த்தனை, ஜி.எஸ்.டி. போன்றவை கொண்டுவரப்படுகின்றன. தொழில்துறை கோமா நிலையில் இருந்து மீள மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கிரைண்டர் உற்பத்தியாளர்கள் கூறினர். கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் கூறியதாவது: எந்த தொழிலும் தெரியாத நிலையில் இருந்த எங்களுக்கு இங்குள்ளவர்கள் வேலைக்கான பயிற்சி அளித்து உணவு, ஊதியம் என கைநிறைய சம்பளம் அளித்தனர். இரவு பகல், ஓவர்டைம் என இடைவிடாமல் பணிபுரிந்து வாரம் 4 ஆயிரம் ரூபாய் என சம்பாதித்து இங்குள்ள செலவு போக எங்கள் ஊரில் உள்ள தாய், மனைவிக்கு பணம் அனுப்பினோம்.

ஆனால், தற்போது தொழில் நெருக்கடி காரணமாக வாரம் 2 ஆயிரம் ரூபாய் கிடைப்பதே அரிதாகி விட்டது. இப்ப ஆர்டரே இல்ல. எப்படி வேலைக்கு வெச்சுக்கிறதுன்னு முதலாளி சொல்றார். ஊருலயும் வேலை இல்லைன்னு இங்கு வந்தோம், இப்போ, இங்கேயும் வேலை இல்லேன்னா எங்கே போறது என தெரியல. மத்திய அரசு விரைந்து செயல்பட்டு இத்தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர் நெருக்கடி...!
கடந்த  சில ஆண்டுகளாக நாட்டின் உற்பத்தி துறையில் மிகப்பெரிய மந்தமான சூழல்  நிலவுகிறது. வேலையின்மை அதிகரிப்பால், நிரந்தர தொழிலில் உள்ளவர்கள்  வெளியேற்றம், ஐடி துறையில் வேலையிழப்பு என தொடர் நெருக்கடியை தொழில்துறை  சந்தித்து வருகிறது. இதன் காரணமாக வாங்கும் சக்தி இழந்து, உற்பத்தி  செய்யப்பட்ட பொருட்கள் அளவுக்கு அதிகமாக தேங்கிக்கிடக்கிறது. சிறு, குறு  தொழில்களை விழுங்கும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கபளீகரம் ஒரு புறம்  என்றால், மத்திய அரசின் சலுகை மறுப்பு இன்னொருபுறம் கவலை தருவதாக  தொழில்முனைவோர் கூறுகின்றனர்.

Tags : grinder manufacturing companies , Economic recession, grinder manufacturing company, closure
× RELATED 60 சதவீத கிரைண்டர் உற்பத்தி...