×

8 ஆண்டுகளாகியும் ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளால் சென்னை, புறநகரில் பாதியில் தொங்கும் மேம்பாலங்கள்: போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் மக்கள்

சென்னை: 8 ஆண்டுகளாகியும் ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளால் சென்னை மாநகரில் பாதியில் மேம்பாலங்கள் தொங்கி நிற்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பது தொடர்கதையாகி வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தாம்பரம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், குன்றத்தூர், போரூர், பாடி உட்பட புறநகர் பகுதிகளில் இருந்து மாநகருக்குள் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த வாகனங்களால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.  இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மேடவாக்கம் சந்திப்பு மற்றும் கோவிலம்பாக்கம் சந்திப்பு, பல்லாவரம் சிக்னல், கோயம்பேடு காளியம்மன் கோயில், வேளச்சேரி விஜயநகர், ரெட்டேரி, அண்ணாநகர் உள்ளிட்ட 9 இடங்களில் கடந்த 2012ம் ஆண்டு மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதில், 146 கோடி செலவில் மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பில் மேம்பாலம், 108 கோடி செலவில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலம், 82 கோடி செலவில் பல்லாவரம் மேம்பாலம், 93 கோடியில் கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலம், கீழ்க்கட்டளை அருகே மேடவாக்கம் சாலை மற்றும் பல்லாவரம் துரைப்பாக்கம் சாலை சந்திப்பில் 64 கோடியில் மேம்பாலம், 80 கோடியில் ரெட்டேரி அருகில் பெரம்பூர் செங்குன்றம் சாலை சந்திப்பில் பல்வழிச்சாலை மேம்பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பாலங்கள் அனைத்தும் 2 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. ஆனால், நிதி ஒதுக்கீடு செய்து 8 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை இந்த மேம்பாலம் பணிகள் முழுமையாக முடியவில்லை. குறிப்பாக, பல்லாவரம், வேளச்சேரி, மேடவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் மேம்பால பணிகள் அரைகுறையாக தான் நிற்கிறது.

இந்த பாலப்பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவனங்கள் காலக்கெடு பலமுறை வழங்கியும் முடிக்காமல் இழுத்தடித்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நடைபெறும் மேம்பால பணிகள் 50 சதவீத பணிகள் கூட முடியவில்லை. இதனால், மேம்பாலம் நடைபெறும் சாலைகளில் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மாநகர் பகுதி நோக்கி வரும் வாகனங்கள் வருவதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளது.
பாலப்பணிகளுக்கான சாலைகளில் பில்லர், தடுப்புகள் அமைக்கப்பட்டு இருப்பதால், பாலம் கட்டுமான பணி நடைபெறும் பகுதிகளை தாண்டி வரவே குறைந்தபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் ஆவதாக கூறப்படுகிறது. மேலும், மேம்பால பாலம் நடைபெறும் சர்வீஸ் சாலைகளும் குண்டும் குழியுமாக இருப்பதால், அவ்வழியாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.  இதற்கு மேம்பால பணிகளுக்கு தகுதியான ஒப்பந்த நிறுவனங்களும் தேர்வு செய்யப்படவில்லை என்பது ஒரு காரணம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனாலேயே மேம்பால பணிகளை ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகிறது.

குறிப்பாக, மேடவாக்கம் மேம்பால பணிக்கு தகுதியான நிறுவனத்திடம் ஒப்படைக்காத நிலையில் அந்த நிறுவனம் மேம்பால பணிகளை பாதியில் விட்டு ஓட்டம் பிடித்தது. இதை தொடர்ந்து தற்போது புதிதாக மேம்பால பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு அந்த நிறுவனம் மூலம் பணிகளை செய்து வருகிறது.ஆனாலும், மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் தான் நடந்து வருகிறது. குறித்த காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்காமல் இழுத்தடித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும், தற்போது மேம்பால பணிகளில் குறைந்த நபர்கள் மட்டுமே பணிபுரிந்து வரும் நிலையில் இந்த பால பணிகளை இந்தாண்டுக்குள்ளாவது முடிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, சென்னை புறநகர்பகுதியில் படிப்பு, பணி காரணமாக தினமும் லட்சக்கணக்கானோர் மாநகருக்குள் வந்து செல்கிறோம். அவ்வாறு வரும் போது பீக் அவர் காலக்கட்டங்களில் இந்த 4 மேம்பாலம் நடைபெறும் பகுதிகளை தாண்டி வர குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 1 மணிநேரத்திற்கு மேல்வரை ஆகிறது. இதன் காரணமாக தற்போது முன்கூட்டியே புறப்பட வேண்டியுள்ளது. அப்படியிருந்தும் குறித்த நேரத்திற்கு சென்று சேர முடியவில்லை. தற்போது பாலம் நடைபெறும் பகுதிகளில் வேலை மெதுவாக நடந்து வருகிறது. இப்படியே நடந்தால் இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆக வாய்ப்புள்ளது.  இந்தாண்டு இறுதிக்குள்ளாவது பாலப்பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூடுதல் நிதிக்காக மேம்பால பணி தாமதம்:
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஒருவர் கூறும் போது, மேம்பால பணிகளை முடிக்க 48 மாதங்கள் வரை மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்படும். இந்த காலகட்டத்தில் பணிகளை முடித்தால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியதில்லை. ஆனால், ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் அந்த குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்காமல் இழுத்தடிக்கும். அதன்பிறகு அந்த நிறுவனம் நிதி போதாது எனக்கூறி பணிகளை அப்படியே நிறுத்தி விடும். மேலும், கட்டுமான செலவு காரணம் காட்டி கூடுதல் நிதி கேட்கும். இந்த மேம்பால பணிகளை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று அரசு நிதி ஒதுக்கீடு ெசய்யும். இது போன்று தற்போது தொடங்கிய மேம்பால பணிக்கு பல முறை நிதி ஒதுக்கீடு செய்த நிலையிலும், தற்போது வரை ஒப்பந்த எடுத்த நிறுவனம் பணிகளை முடிக்க வேகம் காட்டாமல் உள்ளது. காரணம் இந்த ஆண்டு மே மாதத்துக்குள் பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி இந்தாண்டுக்குள் முடித்தால் நிதி கிடைக்காது என்பதற்காக பணிகளை ஒப்பந்த நிறுவனம் இழுத்தடிக்கின்றனர்’ என்றார்.

மேம்பாலம் வேண்டாம் என பொதுமக்கள் கெஞ்சல்:
போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னையின் முக்கிய இடங்களான வண்டலூர், பல்லாவரம், ேகாயம்பேடு, மேடவாக்கம், வேளச்சேரி, கோவிலம்பாக்கம் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பகுதிகளில் பாலம் கட்டினால் போக்குவரத்து நெரிசல் சரியாகி விடும் என்று பொதுமக்கள் நினைத்தனர். ஆனால், இவர்கள் பாலம் கட்டுகிறோம் என்று தொடங்கி விட்டு அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர். சாலை முழுவதையும் ஆக்கிரமித்து பணிகள் நடைபெறுகிறது. இதனால், மேம்பாலம் நடைபெறும் சாலைகளில் தினமும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கிறது. குறிப்பாக, மேம்பாலம் கட்டும் முன்பு உள்ள நெரிசலை விட இப்போது, போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது. இதனால், இனி எங்கும் மேம்பாலமே வேண்டாம். மேம்பாலம் கட்டுகிறோம் என்று ஆட்சியாளர்கள் இனி மக்களை இவ்வளவு கஷ்டப்படுத்த வேண்டாம் என்று பொதுமககள் கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

டெண்டர் எடுக்க மறுத்த ஒப்பந்த நிறுவனங்கள்:
கடந்த 2012ல் சென்னை மாநகரில் 4 மேம்பாலங்கள் கட்டுமான பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிக்கு ஒப்பந்த எடுக்க டெண்டர் எடுக்க எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை. குறிப்பாக, 6 முறை டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டும், எந்த நிறுவனங்களும் எடுக்கவில்லை. இதனால், 4 மேம்பால பணிகளுக்கும் 20 முதல் 30 கோடி வரை நிதி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பிறகு, ஒப்பந்த நிறுவனங்கள் டெண்டர் எடுத்தது. தற்போது அந்த ஒப்பந்த நிறுவனங்கள் கூடுதலாக இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி தான் தொடர்ந்து ஆமை வேகத்தில் பணிகளை செய்து வருகின்றனர்.


Tags : bridges ,Chennai ,suburbs , Chennai, Suburbs, Fairs, Traffic,
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...